ADVERTISEMENT
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 50 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மதுரை குடிநீர் திட்டத்திற்கு லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே மதுரை குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை கட்டும் பணி துவங்க உள்ள நிலையில், பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டிருந்த 100 கன அடி நீர் மே 24 ல் முழுவதும் நிறுத்தப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில் லோயர்கேம்ப் வண்ணான்துறையில் ஆற்றில் நீர் செல்வதற்காக மணல் மூடைகள் அடுக்கி தடுப்புகள் அமைத்து மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 50 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இது மீண்டும் 100 கன அடியாக அதிகரிக்கப்படும். கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்தாலும் தடுப்பணை கட்டும் பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 118.15 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து 105 கனஅடியாக இருந்தது. நீர் இருப்பு 2294 மில்லியன் கன அடியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!