முதல் போக நெல் சாகுபடிக்கு ஜூன் முதல் நாளில் நீர் திறப்பு உறுதி
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கான நாற்றங்கால் வளர்க்க ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்க விவசாய சங்க நிர்வாகிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இரு போக நெல் சாகுபடி முல்லைப்பெரியாறு அணை பாசனத்தில் மேற்கொள்ளப்படுகிறது. லோயர்கேம்பிலிருந்து பழநிசெட்டிபட்டி வரை சாகுபடி நிலங்கள் உள்ளன. இரு போகம் ஒரு போகமாக மாறும் நிலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. பருவமழை பொய்த்து முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட சமயங்களில் ஒரு போகம் கை விடப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவையான அளவிற்கு மழை பெய்து அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்ததால் இரு போக நெல் சாகுபடி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்தாண்டிற்கு இன்னமும் சில நாட்களில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் அணையின் நீர் மட்டம் 118 அடியாகவே உள்ளது. 112 அடி இருந்தாலே, நாற்றங்கால் வளர்க்க தண்ணீர் திறக்கலாம் என்ற விதி உள்ளது. இருந்த போதும் பொதுப்பணித்துறையினர் நீர் திறப்பிற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருந்ததனர்.
இது தொடர்பாக கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறன் கூறுகையில், ஜூன் முதல் தேதி முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளை விவசாய சங்க நிர்வாகிகள் சந்தித்து வலியுறுத்தினோம். அதிகாரிகள் ஜூன் முதல் தேதியில் நீர் திறக்க உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் விவசாயிகள் இப்போதே நாற்றங்கால் வளர்க்க தேவையான பணிகளை துவக்கி உள்ளனர் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!