ADVERTISEMENT
ஆண்டிபட்டி : வைகை அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் கோடை வெயிலுக்கு இதமாக நீர்த்தேக்க பகுதியில் இறங்கி ஆபத்தான முறையில் குளிக்கின்றனர்.
தேனி மாவட்டம் வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானல், கேரளா வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை பூங்கா மற்றும் நீர்தேக்கப் பகுதியை சுற்றிப் பார்க்க தவறுவதில்லை.
தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் வைகை அணையிலும் அதிகம் உள்ளது. வெயில் நேரத்தில் அணை நீர்த்தேக்க பகுதியில் இறங்கி சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான குளியல் செய்கின்றனர்.
வைகை அணை நீர்த்தேக்கம் கரடு முரடான பாறைகளையும் பல இடங்களில் திடீர் பள்ளங்களையும் கொண்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நீர்த்தேக்க பகுதியில் இறங்குவதற்கு அனுமதி இல்லை. இது குறித்த எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சுற்றுலா வரும் பயணிகள் குழந்தைகளுடன் நீர்த்தேக்கத்தில் இறங்கி குளித்து செல்கின்றனர். தற்போது வைகை அணை நீர்மட்டம் 52.92 அடியாக உள்ளது.
அணை உயரம் 71 அடி. விதிகளை மீறி நீர்த்தேக்க பகுதியில் இறங்கி குளிப்பவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை இல்லை. அஜாக்கிரதையால் பாதிப்பு ஏற்படும் முன் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!