ADVERTISEMENT
மூணாறு : மூணாறு ஊராட்சியில் உறுப்பினரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்திய விவகாரத்தில் உறுப்பினர் பொறுப்பு தொடரலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மூணாறு ஊராட்சி 21 வார்டுகளைக் கொண்டது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 11, இடதுசாரி ஜனநாயக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்று காங்., ஊராட்சியை கைப்பற்றியது.
கட்சி தாவல்: 2021 டிசம்பரில் காங்கிரசைச் சேர்ந்த 11, 18 வார்டு உறுப்பினர்கள் இடது சாரி கூட்டணியில் இணைந்ததால் காங்கிரஸ் நிர்வாகம் கவிழ்ந்தது. அதேபோல் இந்திய கம்யூ., சேர்ந்த 8ம் வார்டு உறுப்பினர் 2022 செப்டம்பரில் காங்கிரசில் இணைந்ததால் அதன் பலம் 10 ஆக உயர்ந்தது.
நோட்டீஸ்: இந்நிலையில் இடது சாரி ஜனநாயக கூட்டணி நிர்வாகத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்., நோட்டீஸ் அளித்தது. அதன் மீதான ஓட்டெடுப்பு பிப்.22ல் நடக்க இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த 17ம் வார்டு உறுப்பினர் பாலசந்திரன் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தார். அதனால் ஊராட்சியில் இடது சாரி கூட்டணி நிர்வாகம் கவிழும் சூழல் ஏற்பட்டது.
திருப்பம்: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடப்பதற்கு சிறிது நேரம் முன்பு பாலசந்திரன் தனது உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக தபாலில் கடிதம் அனுப்பியதாக கூறி ஊராட்சி செயலர் சகஜன் கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார். அதனால் உறுப்பினர் தகுதி இழந்ததாக கூறி ஓட்டெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
புகார்: ராஜினாமா கடிதத்தில் தனது கையொப்பம் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாலசந்திரன் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அது குறித்து விசாரணை நடந்தது.
ராஜினாமா கடிதத்தில் சான்றொப்பமிட்ட மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் லோபின்ராஜிடம் நடத்திய விசாரணையில் பாலசந்திரன் நேரடியாக ஆஜராகாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பிரமுகர்கள் இருவர் கொண்டு வந்த கடிதத்தில் கையொப்பமிட்டதாக கூறினார்.
அதனால் பாலசந்திரனின் கையொப்பம் போலியாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் அவர் உறுப்பினர் பொறுப்பை தொடரலாம் என மாநில தேர்தல் ஆணையர் ஷாஜகான் நேற்று உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!