தேனி : மதுரை-- - தேனி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்கி ஓராண்டு ஆகியும் போடி -சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் முதல் மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்காததால் மாவட்ட மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் கம்பம், கேரளாவில் விளையும் ஏலக்காய், மிளகு, காபி போன்ற நறுமணப் பொருட்களை கொண்டு செல்ல தென்னிந்திய ரயில்வே கம்பெனி சார்பில் 1926ல் போடி -- மதுரை இடையே மீட்டர் கேஜ் ரயில்பாதை திட்டம் துவக்கியது. 1928 நவ., 20ல் ரயில் சேவை துவங்கியது. 1970ல் இரண்டு பயணிகள் ரயில் எதிரெதிர் மார்க்கமாக இயக்கப்பட்டு 1980ல் அந்த சேவை ஒன்றாக குறைக்கப்பட்டது. மதுரை-போடி மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற 2010 டிச., ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின் 98 கி.மீ., துார அகல ரயில்பாதை பணிகள் 2011ல் துவங்கியது.
துவக்கத்தில் போதிய நிதி ஒதுக்கீடு இன்றி பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. இதனை தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதனால் அகல ரயில்பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கிடு செய்து, பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன. வைகை ஆற்றுப்பாலம், 30 சிறு பாலங்கள், ரயில்வே நிலையப் பணிகள் முடிக்கப்பட்டன.
கடந்தாண்டு மே 20ல் மதுரை -- தேனி வரை பணிகள் நிறைவு பெற்று மே 26ல் பிரதமர் மோடி மதுரை-- தேனி ரயில் சேவையை சென்னையில் இருந்து காணொலி மூலம் துவக்கி வைத்தார். 12 ஆணடுகளாக ரயில் சேவை இன்றியின்றி இருந்த தேனி மாவட்ட மக்களுக்கு கடந்தாண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் தேனி மக்களின் ரயில்சேவை கனவு நனவானது.
அதன்பின் கூடுதல்நிதி ஒதுக்கி மொத்தம் 527 கோடியில் தேனி -- போடி வரையிலான அகல ரயில்பாதைப் பணிகளும் முழுவதும் முடிந்துள்ளன.தேனி - மதுரை ரயில் சேவையின் ஓராண்டு நிறைவடைந்தும் கடந்த மே 12 முதல் போடியில் இருந்து -எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் , ரயில் நிலையம் வரை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவித்தனர். பல மாதங்களுக்கு முன் அறிவித்தும் சேவை இன்னும் துவக்கப்படாததால் மாவட்ட மக்களை வேதனை அடைய செய்துள்ளது. சேவை துவங்காதது குறித்து பயணிகள், சமூக ஆர்வலர்கள் கருத்து:
பணி முடித்தும் இயக்க தயக்கம் ஏன்
ஆர்.சங்கரநாராயணன், தலைவர், மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம், தேனி: தெற்கு ரயில்வே கடந்த பிப்., 19 எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் -- மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்கப்படும். மதுரை - தேனி ரயிலை போடி வரை நீட்டிக்கப்படும் என அறிவித்தது. அதற்கு பின் மதுரையில் பொது மேலாளரை சந்திந்த போது,'பணிகள் முழுவதும் முடிந்தது சேவை துவங்க தயார் நிலையில் உள்ளது', என்றார்.
ஆனால் அரசியல் காரணங்களால் இச்சேவை காலதாமதமாகிறது என தோன்றுகிறது. தேனி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாநில அரசு தலையிட்டு போடி சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்சேவை துவக்கப்பட வேண்டும்.
ரயில் இயக்கினால் ஏல வணிகம் மேம்படும்
டி.சரவணக்குமரன், ஒருங்கிணைப்பாளர், மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம்: போடி ரெங்கராதபுரத்தில் இருந்து சுடிதார், ஆயத்த ஆடைகள் ஈரோட்டுக்கு அதிகளவில் செல்கின்றன. ரயில்சேவை போடிக்கு இலலாததால் ஒருங்கிணைந்த ஏலக்காய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் (யு.சி.ஏ.,) வணிக ரீதியான பண்ட மாற்றங்களுக்காக கனரக வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அதிக செலவு பொருட்சேதம் ஏற்படுகிறது. போடி வரை ரயில் சேவை கிடைத்தால் ஏல வணிகம் மேம்படும்.
தினமும் சென்னைக்கு 3 ஆயிரம் பேர் பயணம்
பிரபு, வழக்கறிஞர், தினசரி பயணி, தேனி: தற்போது போடி, தேனியில் இருந்து தினமும் 3 ஆயிரம் பேருக்கு மேல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை செல்கின்றனர். சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் -மதுரை, தேனி - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை போடி வரை நீட்டிக்க வேண்டும். காலதாமதப்படுத்துவது வேதனையாக உள்ளது. பிப்ரவரியில் அறிவித்தது போல் விரைவில் சேவையை துவக்க அரசும், அரசியல் வாதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.', என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!