புதுச்சேரி: புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' செய்து பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை 'ஆல் பாஸ்' செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியது. மேலும் ஒன்பதாம் வகுப்பை பொறுத்தவரை ஆண்டு இறுதி தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 35 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளதை கவனத்தில் கொண்டு, தேர்ச்சி அளிக்க வேண்டும்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வரையிலான 'ரிசல்ட்' வெளியிடும் முன் பள்ளி ஆய்வாளர்களின் பார்வைக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெற உத்தரவிடப்பட்டிருந்தது.
அதனையொட்டி, ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'ரிசல்ட்' வெளியிடும் பணியில் பள்ளிகள் முழு வீச்சில் இறங்கின. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு எழுதிய அனைவரும் 'ஆல் பாஸ்' என பள்ளி கல்வி துறை இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.

நான்காவது ஆண்டு
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆண்டு தோறும் கட்டாய தேர்ச்சி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 9ம் வகுப்பிற்கு, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-20; 2020-21; 2021-22, என மூன்று ஆண்டாக தொடர்ந்து 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டது. தற்போது 2022-23 கல்வியாண்டிலும் 9ம் வகுப்பிற்கு நான்காவது ஆண்டாக 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது. இது பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு பேர்
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 741 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த தேர்ச்சி அறிவிப்பின் மூலம், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதுச்சேரியில்-76,166 பேர், காரைக்கால்-16,407 பேர், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை புதுச்சேரியில்-48,240, காரைக்கால்-10,078 பேர், ஒன்பதாம் வகுப்பில் புதுச்சேரியில் 16,500, காரைக்காலில்-3,500 பேர் என மொத்தம் 1,70,891 மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்
வாசகர் கருத்து (3)
புதுச்சேரியில்.புதிய கல்விக்.கொள்கை அமல் படுத்தப் பட்டது
இதுக்கு பேசாமல் பையன்கள் பள்ளிக் செல்லாமல் வீட்டில் இருந்தபடி அடிப்படை கல்வி கற்று அந்த 14 வயதில் நேரடியாக 9 வகுப்புக்கு நுழைவு தேர்வு மூலமாக சேர்ந்து கொள்ளலாமே
பி றகு ஏன் பள்ளிக்கூடங்கள் திறக்கவேண்டும் . பள்ளிக்கல்வி அமைச்சர் எதற்கு. பள்ளி பாட நூல் கழகம் எதற்கு .எல்லாவற்றையும் மூடி விடலாமே.