கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், வேளாண் இணை இயக்குனர் கண்ணையா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;
மாதவன்: தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை விரைந்து அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுபாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். டெல்டா பகுதியில் பல ஆண்டுகள் துார்வாரத கிளை வாய்க்கால்களை துார்வார வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும். ரவீந்திரன்: கல்லணை முதல் கீழணை வரை 81 கி.மீ., துாரம் கொள்ளிடம் ஆற்றின் மூலம் கடலுார், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 1.52 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சை மற்றும் அரியலுார் மாவட்ட விவசாயிகள் கதவணை, தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அரியலுார் மாவட்டம் துாத்துார் இடையே கதவணை கட்ட திட்ட மதிப்பீட்டு தயாரிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகிறது. கீழணை பாசன உரிமைகள் காக்கும் பொருட்டு கல்லணை முதல் கீழணை வரை கதவணையோ, தடுப்பணையோ கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ராமலிங்கம்: குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. இந்த எள் அறுவடை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், செடியில் எள் வெடித்து கீழே விழுந்து வீணாகிறது. எள் அறுவடை இயந்திரம் வழங்க வேண்டும். மலட்டாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கலியபெருமாள்: விருத்தாச்சலம் பகுதியில் சாகுபடி செய்யும் பயிர்களை குரங்குகள் நாசம் செய்து வருகின்றது. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலி தண்ணீரை விருத்தாச்சலம் மணிமுக்தா ஆற்றிற்கு கொண்டுவர வேண்டும். குப்புசாமி: மாவட்டத்தில் தானே புயலால் முந்திரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கடலுார் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து முந்திரிகள் இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், தற்போது உள்ளூர் முந்திரிக்கு சரியான விலை கிடைக்கவில்லை. 15,000 ரூபாய் ஒரு மூட்டை முந்திரி கொட்டை விற்பனை செய்த நிலையில், தற்போது 6,000 ரூபாய்க்கு கேட்கின்றனர். வெளிநாட்டில் இருந்து முந்திரி இறக்குமதியை தடை செய்ய வேண்டும். முந்திரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 50 மூட்டைகள் கூட விளைச்சல் வருவதில்லை என, கண்ணீர் விட்டு பேசினார். மகாராஜன்: வெலிங்டன் ஏரி ஒருமுறை கூட ஆழப்படுத்தவில்லை வெலிங்டனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும். ஏரியில் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும். செல்வராஜ்: ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பகுதிகளை காவிரிடெல்டா பகுதிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து, வெளிநாட்டு முந்திரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஒருமித்த குரலாக கூறினர்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் பேசுகையில், 'விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுங்கள்.
விவசாயிகள் பேசும் கோரிக்கைகளை அதிகாரிகள் குறித்து வைத்து, தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை ஆய்வு கூட்டத்தில் நான் கேட்பேன். அதற்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!