ADVERTISEMENT
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பழுதடைந்த குடிநீர் மோட்டாரை சீர் செய்யாததை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், பேரூர் ஊராட்சியில் குடிநீர் மோட்டார் பழுதடைந்தது. இதனால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கோடைக்காலம் என்பதால் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெகு தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வருவதால், அவதியடைந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த பேரூர் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9:30 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகுமாறு தெரிவித்தனர். மக்கள் கலைந்து போக மறுத்தனர்.இதனையடுத்து ஊராட்சி தலைவர் கலாவதி சுப்ரமணியம், பேச்சு வார்த்தை நடத்தி, மோட்டாரை சரி செய்து, விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.அதனை ஏற்று, காலை 10:15 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!