காங்., தலைவர் அழகிரிக்கு மாஜி அமைச்சர் கண்டனம்
கடலுார் : கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் தொழில்துறை தரவுகளை விமர்சித்து பேசிய காங்., மாநிலத் தலைவர் அழகிரிக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்தார். சுற்றுப் பயணத்தின் போது, தனது குடும்பத்தை அழைத்துச் செல்லவில்லை.
தமிழகத்தில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்களின் முதல் மாநாட்டில் 44 நிறுவனங்கள் 73,711 கோடி முதலீட்டில் உற்பத்தி துவங்கி, 1,86,838 பேருக்கும், இரண்டாவது மாநாட்டில் 81 நிறுவனங்கள் 24,492 கோடி முதலீட்டில் உற்பத்தி துவங்கி, 1,10844 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், தனது வெளிநாடு சுற்றுப் பயணத்தின் போது, 41 நிறுவனங்களின் 8,835 கோடி ரூபாய் மதிப்பில் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்து 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்.
கார் உற்பத்தி மற்றும் கார் உதிரி பாகங்கள் உற்பத்தியில் உலக அளவில் தமிழகம் முதல் 10 இடத்திற்குள் உள்ளது. இது கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள். இதெல்லாம் மாநில காங்., தலைவர் அழகிரிக்கு ஏன் தெரியவில்லை.
கடலுார் மாவட்டத்தில் 50,000 கோடி முதலீட்டில் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையை கொண்டு வர நியூயார்க்கில் முன்மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தோம். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியின் தொழில்துறை தரவுகளை ஆராயாமல் விமர்சித்து பேசுவதை மாநில காங்., தலைவர் அழகிரி தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!