கர்நாடகாவில் 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்
பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் அரசின் அமைச்சரவை இன்று (மே 27)விஸ்தரிக்கப்படுகிறது. 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொள்கின்றனர்.
இம்மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மே 20 பதவியேற்ற முதல்வர், துணை முதல்வர், எட்டு அமைச்சர்களுக்கு நேற்று வரை துறைகள் ஒதுக்கப்படவில்லை.
3 நாள் ஆலோசனை
துறைகள் ஒதுக்குவது குறித்தும், அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாகவும் புதுடில்லியில் மூன்று நாட்களாக தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன.
நேற்று சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை முதல்வர், துணை முதல்வர் தனித் தனியாக சந்தித்து பேசினர்.
இறுதியாக காலியாக உள்ள 24 அமைச்சர் பதவிகளையும் நிரப்ப, கார்கே பச்சைக்கொடி காட்டினார். பட்டியலில் உள்ளவர்களுக்கு முதல்வரே மொபைல் போனில் பேசி, அமைச்சராக பதவியேற்க வரும்படி அழைப்புவிடுத்தார்.
இந்த தகவல் வெளியானதும், அமைச்சர் பதவி எதிர்பார்த்த தார்வாட் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பட்டியலில் அவரது பெயர் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
பதவி கேட்டு புதுடில்லியில் முகாமிட்டிருந்தவர்களுக்கு, வாரிய தலைவர் பதவி வழங்குவதாகவும், இரண்டரை ஆண்டுகளுக்கு பின், சிலரை நீக்கிவிட்டு வாய்ப்பு தருவதாகவும் சமாதானம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர், துணை முதல்வர் சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு பெங்களூரு திரும்பினர்.
இன்று காலை 11:45 மணிக்கு பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடக்க உள்ளது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், புதியவர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பதவியேற்பு முடிந்த பின், இன்று மாலையே துறைகள் ஒதுக்கப்பட உள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!