கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அடிப்படை வசதி; சென்டாக் மாணவர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி, : கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்க தலைவர் நாராயணசாமி, கவர்னர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் சென்டாக் மூலம் 85 மாணவர்களும், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் மூலம் 15 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆண்டுக்கு 100 மாணவர்கள் என, 5 ஆண்டிற்கு 500 மாணவர்கள் படிக்கும் கல்லுாரியில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. புதிய மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் போர்க்கால அடிப்படையில் பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
வெளி மாநிலம் மற்றும் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய மாணவர்கள் தங்கும் விடுதி இல்லாததால் வெளியில் தாங்கி படிக்கின்றனர். எனவே கல்லுாரியில் தங்கும் விடுதிகள் கட்டித் தரவேண்டும். தற்போது உள்ள மகளிர் விடுதியையும் விரிவுபடுத்தி பாதுகாப்பு நிறைந்ததாக அமைத்து தரவேண்டும்.
போதிய ஆய்வக உபகரணங்கள் இன்றி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சிறப்பு மிகுந்த ஆய்வகமும், உபகரணங்களை நிறுவ வேண்டும். அதற்கான நிதியுதவியை அரசு வழங்க வேண்டும். மேலும், கல்லுாரி வளாகத்தில் தரமான சாலை வசதி ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!