ADVERTISEMENT
புதுச்சேரி : புதிதாக கட்டப்பட உள்ள சட்டசபையின் வடிவமைப்பு, அதில் ஏற்படுத்தப்படவுள்ள வசதிகள் குறித்து நொய்டாவை சேர்ந்த எனார்க் கன்சல்டன்ஸ் நிறுவனத்தினர் முதல்வர், சபாநாயகர் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரியின் தற்போதைய சட்டசபை கட்டடம், கடந்த 1820ல் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இக்கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் புதிய சட்டசபை கட்டடம் கட்ட கடந்த 2008 ம் ஆண்டில் காங்., ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி முடிவு செய்தார். ஆனால் ஆட்சி மாற்றம் நிதி நெருக்கடி காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
என்.ஆர் காங்.,-பா.ஜ..ஆட்சி கடந்த 2021 பொறுப்பேற்ற சூழ்நிலையில் முதல்வர் ரங்கசாமியின் புதிய சட்டசபை கட்டடம் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
சபாநாயகர் செல்வம் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் சட்டசபை கட்ட முயற்சி மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.350 கோடி செலவில் ஒருங்கிணைந்த சட்டசபை வளாகம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய பிரதேசம் நொய்டாவை சேர்ந்த எனார்க் கன்சல்டன்ஸ்' என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, இந்நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று புதிய சட்டசபை வளாகம் குறித்து, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.
புதிய சட்டசபை கட்டடம் தரைத்தளம் மற்றும் ஐந்து மாடிகளுடனும், தலைமை செயலகம் தரைத்தளம் மற்றும் நான்கு மாடிகளுடன் அமைய உள்ளது. உட்புற சாலைகள் 7 மீட்டர் அகலத்திலும், நடைபாதைகள் 2 மீட்டர் அகலத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது.
புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலகத்தின் ஒவ்வொரு தளங்களில் எந்த மாதிரியான வசதிகள் இருக்க வேண்டும் என்று முதல்வர், சபாநாயகர், எம்.எல்.ஏ.,க்கள் எடுத்துரைத்தனர்.
புதிய சட்டசபை கட்டடம் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன்,அரசு கொறடா ஆறுமுகம் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!