பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு, வசதியாக லேப்டாப் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நிர்வாக சிக்கல் காரணமாக தாமதமாகி வந்த டெண்டர் பணியை, பள்ளிக் கல்வித்துறை தற்போது துவங்கியள்ளது.
டெண்டர்
அதன்படி முடிந்த 2022-23 மற்றும் தற்போதைய 2023-24 கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு 25,381 லேப்டாப் வழங்கிட ஜெம்போர்ட்டலில் தற்போது டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மாதம் 12 ம்தேதி இந்த டெண்டர் திறக்கப்பட உள்ளது.
சர்வீஸ் சென்டர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டாலும், அவை பழுதானால் சரி செய்வதில் கடந்த காலங்களில் குழப்பம் ஏற்பட்டது. சரியான சர்வீஸ் சென்டர்கள் இல்லாமல் மாணவர்கள் திண்டாடினர். இம்முறை, பழுதுகளை சரி செய்வதற்கு வசதியாக நான்கு பிராந்தியங்களிலும் சர்வீஸ் சென்டர் ஏற்படுத்த வேண்டும் என டெண்டரில் அரசு நிபந்தனை விதித்துள்ளது.
வரலாறு இது
கடந்த 2015ம் ஆண்டு முதல்வராக இருந்த ரங்கசாமி லேப்டாப் திட்டத்தை முதன் முதலில் அறிவித்தார்.
அந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இலவச லேப்டாப் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ரூ.20 கோடி செலவில் 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
அதன் பிறகு புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாலும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது 8 ஆண்டிற்கு பிறகு மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டு, பணிகளை வேகப்படுத்தி வருகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!