மக்கள் மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு புதிய கலெக்டரிடம் வலியுறுத்தல்
சிவகங்கை : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவுபடி சிவகங்கை மாவட்ட மக்களின் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் நல்ல தீர்வுகாண வேண்டும்என புதிய கலெக்டர் ஆஷா அஜீத்திடம், விவசாயிகள் வலியுறுத்தினர்.
மாவட்ட வழியாக வைகை, பெரியாறு, சருகணி, மணிமுத்தாறு ஆறுகளின் கீழ் 10க்கும் மேற்பட்ட சிற்றாறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழு நீரோட்டத்தை கொண்டு வரவேண்டும்.
கோமாளிபட்டி கிராபைட் தொழிற்சாலை முழுமையாக செயல்படாமல் உள்ளது. இதை முழுமையாக ஆய்வு செய்து, கூடுதல் உப பொருட்கள் உற்பத்தியை அதிகரித்தால் தொழில் வளர்ச்சி பெறும். முத்துபட்டியில் 'ஸ்பைசஸ் பூங்கா' திறந்து பல ஆண்டுகளுக்கு மேலாகியும், முழு அளவில் தொழில் வளர்ச்சி இல்லை.
'வெள்ளை பேப்பர்' அல்ல மக்கள் மனு
சமூக காடுகளை மேம்படுத்த அரசு கூறுகிறது. சிவகங்கையில் அதற்கு உகந்த மண் உள்ளது. ஆனால், வனத்துறை சார்பில் யூகலிப்டஸ் மரங்களை நட்டு, நீர்நிலைகளை பாதிக்க செய்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூட யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு மாற்றாக வனத்துறை பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு, சமூக காடுகளை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். முதல்வர்ஸ்டாலின், பொதுமக்கள் தரும் மனுவை வெறும் வெள்ளை பேப்பராக மட்டுமே பார்க்காமல், அதில் எழுதி உள்ள கோரிக்கைக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகள் முனைப்பு காட்டவேண்டும் என்றார்.
நிதி ஒதுக்கி செய்யும் திட்டங்களுக்கு காலம் எடுக்கலாம். ஆனால் சாதாரண பணிகளை செய்துதரக்கூட அதிகாரிகள் காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது என விவசாயிகள் தெரிவித்தனர்.
மனுவிற்கு 30 நாட்களுக்குள் தீர்வு
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூட பொதுமக்கள் தரும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் உரிய தீர்வு கண்டு, முறையான பதில்களை உரியவர்களுக்கு வழங்க கூறியுள்ளது.
சிவகங்கை முன்னாள் கலெக்டர் ஜெயகாந்தன், நீர்நிலைகளை பாதுகாக்க 21 இயந்திரங்கள் வாங்கி, கண்மாய், குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளைஅகற்றி தமிழக அரசு விருதினை பெற்றார். தற்போது இந்த மாவட்டம் நீர்நிலைகள் மட்டுமின்றி அனைத்து இடங்களும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது.
நகர், பேரூர் மற்றும் கண்மாய்களில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகளுக்கு நீர்நிலைகளை காத்து தர வேண்டும்.
கூட்டுகுடிநீர் திட்டங்கள் முடக்கம்
மாவட்டத்தில் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. ஆனால் பாதுகாப்பு வசதியற்று அவை இயங்குகின்றன. அனைத்து வங்கிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டி, அங்கு சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி பாதுகாக்க வேண்டும்.
கூட்டுகுடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவிக்கின்றனர். மாவட்ட மக்களுக்கு கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க, புதிய கலெக்டர் ஆஷா அஜீத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!