11 கி.மீ., தூரத்திற்கு தண்ணீர் சுற்றிவரும் பரவை கண்மாய்; தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்டுங்க
மதுரை : மதுரையில் குருவித்துறை, திருவேடகம், பரவை பகுதிகளில் நிலத்தடி நீரை தக்க வைப்பதற்கும் பாசன பயன்பாட்டிற்கும் தடுப்பணை கட்ட வேண்டும்.
வைகை அணையில் இருந்து 34வது கி.மீ., பேரணை தடுப்பணையும், அதிலிருந்து 4 கி.மீ., தொலைவில் சிற்றணை தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. சிற்றணையில் இருந்து 44 கி.மீ., துாரம் வரையான விரகனுார் வரை வரிசையாக 9 தடுப்பணைகள் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி எல்லைக்குள் மேலக்கால், கோச்சடை, ஆரப்பாளையம், ஓபுளா படித்துறை பகுதியில் உள்ள வைகையாற்றின் குறுக்கே நிலத்தடி நீரை தேக்கி வைப்பதற்காக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
நிலத்தடி நீராதாரம் பெருகும்
கடைசியாக இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆரப்பாளையம் அருள்தாஸ்புரம் இடையே ரூ.12 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு 3 கி.மீ., சுற்றியுள்ள குடியிருப்புகளின் நிலத்தடி நீராதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏ.வி. பாலம் பகுதியில் உள்ள தடுப்பணை நிலத்தடி நீரை தேக்கி வைப்பதோடு இரண்டாக பிரிந்து ஒருவழியாக பனையூர் கால்வாய்க்கும் மற்றொரு வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்திற்கும் நீராதாரம் தருகிறது.
சிற்றணையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் குருவித்துறை, 13 கி.மீ., தொலைவில் திருவேடகம் தடுப்பணை, 18 கி.மீ., தொலைவில் பரவை தடுப்பணை கட்ட ஏற்கனவே திட்டமிடப்பட்டு இன்னும் செயல்படுத்தவில்லை. குருவித்துறை குருபகவான் கோயில் அருகே தடுப்பணையும், படித்துறையும் அமைத்தால் பக்தர்கள் குளிக்க முடியும். சுற்றியுள்ள கிராமங்களின் நீராதாரத்தை பாதுகாக்க முடியும். திருவேடகம் அருகே ஏற்கனவே படித்துறை உள்ள நிலையில் தடுப்பணை கட்டினால் போதும்.
பரிதாபத்தில் பரவை கண்மாய்
பரவை கண்மாய் மாவட்டத்தில் 4வது பெரிய கண்மாயாக 175 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க உதவுகிறது. வைகையாறு பள்ளமானதால் கால்வாய் வழியாக பரவை கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
தற்போது பெரியாறு பிரதான கால்வாயின் முதலாவது கிளை வாய்க்கால் வழியாக 11 கி.மீ., சுற்றி வந்து பரவை கண்மாயை தண்ணீர் வந்தடைகிறது. தேனுார், கொடிமங்கலம் இடையே உள்ள வைகையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் 3 கி.மீ., தொலைவில் பரவை கண்மாய்க்கு நீராதாரம் வந்து சேரும். இக்கண்மாயை நம்பி 300 ஏக்கரில் தற்போது வரை பாசனம் நடைபெறுகிறது.
தடுப்பணை கட்டும் போது பரவை, விளாங்குடி, கரிசல்மங்கலம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இதற்கென 2020 - 21 ல் ரூ.26.6 கோடியில் திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கிடைக்கும் மழையை கண்மாய்கள் மூலமும் தடுப்பணை மூலமுமே தக்கவைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்பதால் தாமதமின்றி குருவித்துறை, திருவேடகம், பரவை பகுதியில் தடுப்பணை திட்டத்தை நீர்வளத்துறையில் துவக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!