கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நேற்று துவங்கிய கோடை விழா, மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் மலர்களையும், அரங்குகளை அலங்கரித்த பலவண்ண மலர்கள். காய்கறி, பழங்களாலான உருவங்கள், மலர் அரங்குகள், மலை தோட்ட பயிர்கள், வாசனைப் பொருட்கள் இடம் பெற்றது . இது சுற்றுலாப் பயணிகளை பிரமிக்க வைத்த நிலையில் இதை பார்வையிட்ட பயணிகள் மனதை பறிகொடுத்ததாக புகழாரம் சூட்டினர்.
சுற்றுலா பயணிகள் கூறியதாவது:
புத்துணர்ச்சி பெற்றோம்
துர்கா, உடுமலைப்பேட்டை: முதல்முறையாக கொடைக்கானலுக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள லட்சக்கணக்கான மலர்கள் மனங்களை கொள்ளையடித்தது.
அரங்குகளில் அமைக்கப்பட்ட காய்கறிகளாலான உருவங்கள் பிரமிக்க வைத்தன. சிறுவர் பூங்கா, மலர்களாலான வடிவமைப்புகள், இதமான சீதோஷ்ண நிலை மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. இதை பார்க்கும்போது மீண்டும் ஒருமுறை கொடைக்கானலுக்கு வருவதற்கான மனநிலையை ஏற்படுத்தி உள்ளது.
'கொடை' என்றால் இளமை
அவந்திகா, திருவனந்தபுரம்: மலர் கண்காட்சியில் இடம்பெற்ற பூக்கள் அனைத்தும் மனதை வசிகரித்தன. இங்கு வருகை தந்த நிலையில் ஊர் திரும்ப மனமில்லாத ஒரு மனநிலையை ஏற்பட்டுள்ளது.
பூங்காவில் சிறிய பூக்கள் முதல் பெரிய பூக்கள் வரை நன்றாக பராமரித்துள்ளனர்.
அவற்றின் மத்தியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தது மனதை கவர்ந்துள்ளது. கொடைக்கானல் என்றால் மனதிற்கு இளமை தரும் ஒரு பகுதியாக இருப்பது சிறப்பு என்பதை மறக்க இயலாது.
மனதிற்கு பிரமிப்பு
நிவேதா, கோபிச்செட்டிப்பாளையம்: கொடைக்கானல் மலர் கண்காட்சியை பார்வையிட்டது மனதிற்கு இதமளிக்கிறது. ஐ.டி., துறையில் பணியாற்றும் தங்களுக்கு கொடைக்கானல் புத்துணர்ச்சியை அளித்துள்ளது.
இங்கு அமைத்துள்ள மலர் அரங்குகள், பூத்துக் குலுங்கும் மலர்கள் மனதிற்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப கிரிக்கெட் வீரர் தோனியின் டீ சர்ட், சர்வதேச சிறுதானிய வடிவமைப்பு இவை பிரமிக்க வைக்கிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை சுற்றுலா பயணிகளான தங்களுக்கு இதமாக உள்ளது. தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் கொடைக்கானல் தங்களுக்கு குளுமையை அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!