வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
கொடைக்கானல் : ''கொடை ' நெரிசலுக்கு தீர்வாக மாற்று பாதை ஏற்படுத்தப்படும்,'' என வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கொடைக்கானலில் நடந்த மலர்கண்காட்சி, கோடை விழாவை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி போன்று இங்குள்ள ரோஜா பூங்காவிலும் மலர் கண்காட்சி வரும் ஆண்டில் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள கோயில்களில் அதிக கும்பாபிஷேகங்கள் செய்தது தி.மு.க., ஆட்சியில் தான். 2022 மலர் கண்காட்சியில் 56 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.
கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மாற்று வழிப் பாதை ஏற்படுத்தப்படும். மேலும் இங்கு மூன்று நாள் சுற்றுலா வருவதாக இருந்தால் அரை நாள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இந்நிலையை தவிர்க்க முதல்வரிடம் மாற்று வழிப் பாதையை உருவாக்க கோரிக்கை விடுக்கப்படும். இங்கு விளைச்சல் காணும் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு , ஸ்ட்ராபெர்ரி பரப்பை அதிகரிக்க நடவடிக்கையாக எடுக்கப்படும்,என்றார்.
கூட்டுறவு ஆராய்ச்சி கல்லுாரி
ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: கொடைக்கானல் மலைப்பகுதி காய்கறிகள் விளையும் சிறந்த பகுதியாக உள்ளது.
கேரளா, கிளவரை இடையே ரோடு வசதிகளை ஏற்படுத்தப்படும் பட்சத்தில் இங்கு விளையும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். மேல்மலை பகுதியை மையமாகக் கொண்டு கூட்டுறவு ஆராய்ச்சி கல்லுாரி அமைவதற்காக ரூ. 108 கோடியிலான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. ஊட்டி ராணிக்கு வயதாகிவிட்டது. கொடைக்கானல் இன்றும் இளமையோடு நல்ல சீதோஷ்ண நிலையோடு உள்ளது. இங்கு சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
கொடைக்கானலில் உள்ள ரம்யத்தை பயணிகள் விரும்புகின்றனர். இங்கு அமைதி பூங்காவாக உள்ளதால் உலகில் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக கரும்பு நெல்லிற்கு நேரடி கொள்முதல் வாய்ப்பை முதல்வர் வழங்கி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கொடைக்கானல் ஆங்கிலேயர்கள் தங்குவதற்காக 200 ஆண்டுகளுக்கு முன் கட்டமைத்தனர். இன்றும் அது போல உள்ளது. திண்டுக்கல் ,தேனி மாவட்டம் காய்கறி விளைச்சலில் சிறந்து விளங்குகிறது,என்றார்.
400 ஆண்டுக்கு பின் ரோடு
பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசியதாவது:
கொடைக்கானல் துவங்கி தற்போது 178 ம் ஆண்டு துவங்கியுள்ளது. கொடைக்கானலில் 400 ஆண்டுகளுக்கு மேலாக ரோடு வசதி இல்லாத வெள்ளகெவி கிராமத்திற்கு தி.மு.க., ஆட்சியில் ரோடு வசதி ஏற்படுத்தும் பணி நடக்கிறது.
அருகாமையில் உள்ள சின்னுார் , பெரியூருக்கும் ரோடு வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். பண்ணைக்காடு கீழ்மலைப் பகுதியில் விரைவில் துணைமின் நிலையம் அமைக்கப்படும். மேல்மலை பகுதியில் மின் வெட்டை சீர் செய்ய உயர் மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானலில் நாள்தோறும் குடிநீர் வசதி தற்போதைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்குள்ள ஏரியின் அழகை மேம்படுத்த வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. கொடைக்கானலில் அரிசி கிட்டங்கியும் திறக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய மாற்று வழிப் பாதையான வில்பட்டி பேத்துப்பாறை பழநி சந்திப்பு ரோடு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.
நகராட்சித் தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கமிஷனர் சத்தியநாதன், ஆர்.டி.ஓ., ராஜா சுற்றுலா அலுவலர் சுதா ,கீழ் மலை ஒன்றிய செயலாளர் கருமலை பாண்டி கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!