ராஜபாளையம், : ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அடுத்த புத்தூர் ரோட்டில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தளவாய்புரம்-இனாம் கோவில்பட்டி சாலையில் ரோட்டின் நடைமேடையை உயரமாக அமைத்ததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் சிவகாசியை அடுத்து அதிக தொழில் பகுதியாக தளவாய்புரம் செட்டியார் பட்டி உள்ளது. இப்பகுதியை மையமாக வைத்து பாவாடை, நைட்டி, ரெடிமேட் ஆடைகள், விசைத்தறி, பெரிய அளவிலான மாடல் ரைஸ் மில்கள் இயங்கி வருகின்றன.
இவற்றிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மூலப்பொருட்கள் மற்றும் முழுமை அடைந்த உற்பத்தி பொருட்கள் விற்பனைக்காகவும் கொண்டு செல்லப்படுகின்றன.
இது தவிர இங்கு செயல்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு அருகாமை பகுதியான மாங்குடி, மீனாட்சிபுரம், நல்லமங்கலம், அருள் புத்துார், சோழபுரம் போன்ற பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
இத்துடன் தளவாய்புரம் பகுதியில் இருந்து சங்கரன்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி பகுதிகளுக்கு அருகாமை பாதையாக உள்ள தளவாய்புரம்- இனாம் கோவில்பட்டி சாலை தரம் உயர்த்தப்பட்டது.
இதற்காக செட்டியார்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட இரட்டை கண்மாய் நடுவே அமைந்திருந்த ரோட்டை அகலப்படுத்தியதுடன் இரண்டு பக்கமும் அகலமான நடை மேடையுடன் அமைத்தனர்.
சாலையின் உயரத்தை விட இரண்டு பக்கமும் நடைமேடை அரை அடிக்கும் மேல் அமைந்திருந்ததால் இரண்டு பக்கமும் வாகனங்கள் வரும்போது பக்கவாட்டில் அல்லது எதிரே வரும் டூவீலர்கள் ஒதுங்க வழியின்றி தொடர் விபத்துக்கு உள்ளாகி உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த ரோட்டில் மின்விளக்கு வசதியும் இல்லாத சூழலில் ரோட்டோரம் பாதுகாப்பாக வரும்போதும் அபாயத்தில் சிக்குகின்றனர்.
8 மாதத்தில் 19 விபத்துகள்
கருப்பசாமி, தனியார் ஊழியர்: இப்பகுதி பொது போக்குவரத்து அதிகரிப்பை கணக்கிட்டு தரம் உயர்த்தப்பட்ட இச்சாலை முறையாக அமைக்காததால் உயிர்பலிக்கு வித்திட்டு வருகிறது. நடைபயிற்சிக்கு என ஒதுக்கப்பட்ட இரண்டு பக்கமும் தேவைக்கு அதிகமாக உள்ளது. இரண்டு பக்கமும் கனரக வாகனங்கள் எதிர்கொண்டால் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை தவிர வழியில்லை. குறுகிய காலத்தில் பிரச்சனையால் 19 விபத்துகள் ஏராளமான உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்சியாளர்களிடம் முறையிட்டும் சீரமைக்க நடவடிக்கை இல்லை.
ஒரே அளவில் சமப்படுத்துங்க
மணிகண்டன், தனியார் ஊழியர்: சாலைக்கும் பக்கவாட்டு நடை மேடைக்கும் வித்தியாசம் இல்லாதவாறு சமப்படுத்தி அமைக்க வேண்டும். தளவாய்புரம் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி எதிரே பாதசாரிகள் நடப்பதற்கும் ரோட்டிற்கும் இணைப்பாக அமைத்ததால் தேவைப்படும் நேரத்தில் ஒதுங்கி செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. இதையே முன்னுதாரணமாக வைத்தும் பாதிப்புகளை கருதியும் தீர்வு காண வழியை மேற்கொள்ள வேண்டும்.
தீர்வு
நெடுஞ்சாலையாக அமைந்துள்ள சாலைக்கு உண்டான விதிமுறை பின்பற்ற படுகிறதா என்ற ஆய்வு மேற்கொள்வதுவாகனங்கள் தேவைக்கு ஏற்ப இரண்டு பக்கமும் ஒதுங்க வழியற்று தடையாக உள்ள நடை மேடையை ரோடு அளவிற்கு மட்டப்படுத்தி சரிவு ஏற்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!