ADVERTISEMENT
காரைக்குடி : காரைக்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை பணி முழுமை பெறாமல்,சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரைக்குடி நகராட்சியில், 2017ல் ரூ.112.5 கோடியில் பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து வரி உயர்வு, கூடுதல் பணி உள்ளிட்ட காரணங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்தது.
நகரின் பல பகுதிகளிலும்,ஆழ்குழாய் பதிக்கும் பணியை தொடர்ந்து புதிய சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, 32 ஆயிரம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு முதலாவதாக ரூ.6 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 250 குடியிருப்புகளுக்கு குழாய் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தை இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் திறந்து வைக்கின்றனர்.
குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகள் 70 சதவீதமே நடந்துள்ள நிலையில் இன்னும் 30 சதவீத பணிகள் நடைபெற உள்ளதாகவும், வீடுகளுக்கு முழுமையாக இணைப்பு வழங்கப்படவில்லை என்றும், திட்டம் முழுமை பெறாமல் திறப்பு விழா நடப்பது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ச.திருஞானம், அ.தி.மு.க., மாநில இளைஞரணி இணைச் செயலாளர்கூறுகையில், பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நடைபெறவில்லை. திட்டம் நிறைவேறாமல் திறப்பு விழா நடப்பதுமக்களை ஏமாற்றுவதுபோல் உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்க வேண்டும். இணைப்பு வழங்கப்பட்டு கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு நிலையம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
இணைப்பு பணி இதே வேகத்தில் நடந்தால் பணி முடிய 3 ஆண்டுகளாகும். பாதாள சாக்கடை குழாய், சுத்திகரிப்பு நிலையம் செல்லாமல், தேனாற்றில் தற்போது விடப்பட்டுள்ளது. கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். முழுமையாக திட்டப் பணிகளை முடிக்க வேண்டும்.
உதவி நிர்வாக பொறியாளர் பிரேமலதா கூறுகையில், குடிநீர் வழங்கல் துறைக்கு வழங்கப்பட்ட மதிப்பீட்டிற்கு தக்கவாறு பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி முடிவடைந்து விட்டது. வார்டு நீட்டிப்பு பகுதிகள் குறித்து நகராட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.
நகராட்சியினர் தற்போது வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இணைப்பு முழுமையாக முடிந்தவுடன் 6 மாதம் சோதனை ஓட்டம் நடைபெறும். தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!