ADVERTISEMENT
பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பயணிகளை ஏற்றி விதிமீறுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ, பயணிகள் ஆட்டோக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு ஆட்டோக்கள் முக்கிய காரணிகளாக உள்ளது. விதிமீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரால் போக்குவரத்து நெரிசல் மட்டுமில்லாமல் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. கூட்டமான இடங்களில் கூட வேகத்தை குறைக்காமல், பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் திரும்புகின்றனர். திருப்பங்களில் செய்கை ,இன்டிகேட்டர் பயன்படுத்தாமல் திருப்புவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன . விதி மீறலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் பாதிக்கப்படும் வாகன ஓட்டுநர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர்.
வாகன நெரிசல் அதிகம் உள்ள சாலைகளில் ஓட்டுநர்களின் அத்துமீறலால் வாகன நெரிசல் சரி செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர். அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றனர். குறிப்பாக வேகத்தடை, சாலை திருப்பங்கள் போன்றவற்றில் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
இது போன்று விதி மீறும் ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
.................
நடவடிக்கை எடுக்கலாமே
பழநி முருகன் கோயில் அடிவாரத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் வரை ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக தொல்லை தரும் விதமாக ஆட்டோக்களை இயக்குகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறு, முகூர்த்த நாட்கள் போன்ற கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் எந்த வித போக்குவரத்து விதிகளையும் கடைபிடிக்காமல் ஆட்டோக்களை இயக்குகின்றனர். இதுகுறித்து சக வாகன ஓட்டுநர்கள் கேட்டால் அவர்களிடம் வம்பு இழுக்கின்றனர். அதிக சவாரி எடுக்கும் நோக்கில் வேகமாக செல்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் நபர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. அதிக நபர்களை ஏற்றி செல்வதால் வாகனத்திற்குள் அமர்ந்து செல்லும் நபர்களும் அச்சத்துடன் பயணிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஹாரன்களில் ஒலி எழுப்புகின்றனர். விதிமீறும் ஆட்டோக்கள் மீது அபராதம் விதிப்பதுடன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகாஷ், சமூக ஆர்வலர், பழநி.
.............
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!