ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு நிரந்தர தீர்வுக்கு மக்கள் எதிர்பார்ப்பு
காரியாபட்டி : காரியாபட்டியில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. விபத்துக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டியில் கே.செவல்பட்டியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, பஜாரில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, பழைய தாலுகா அலுவலகத்தில் இருந்து முக்கு ரோடு வரை, திருச்சுழி ரோட்டிலிருந்து முக்கு ரோடு மாரியம்மன் கோயில் வரை, ஒன்றிய அலுவலக ரோடு, பஸ் ஸ்டாண்ட் பஸ் நிறுத்தம் சுற்றி ரோட்டோரங்களை ஆக்கிரமித்துள்ளனர். கடை வைத்திருப்பவர்கள் ரோடு வரை செட் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
பல சரக்கு கடை, நகை கடை, ஜவுளிக்கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்கள் டூவீலர்கள், கார், ஆட்டோ, சரக்கு வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துகின்றனர். ஓரமாக நிறுத்தாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்துகின்றனர்.
அதிவேகமாக வரும் தனியார் பஸ்கள் மற்ற வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பஸ் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்துபவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவர். இது தொடர்கதையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர். அவ்வப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றுவதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
ஒரு சில நாட்களிலேயே ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிரந்தரமாக ஆக்கிரமிப்பை அகற்றி, பேரூராட்சி, போலீசார், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!