ADVERTISEMENT
சிவகங்கை : மாவட்டத்தில் கிராமப்புற விவசாய மின் இணைப்பிற்கு 14.50 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி, விவசாயத்தை செழிக்க செய்ய வேண்டும்,'' என சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.
சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்கலெக்டர் தலைமையில்நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் தனபால் வரவேற்றார்.
கூட்டுறவு இணை பதிவாளர் ஜினு, முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் நாகநாதன், கோட்டாட்சியர் சுகிதா உட்பட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஆர்.கே.தண்டியப்பன், இளையான்குடி: இளையான்குடி முதல் சாலைக்கிராமம் வரை வைகை இடது புற வரத்து கால்வாய்களை ஜூன் மாதத்திற்குள் சீரமைத்தால் மட்டுமே வைகை தண்ணீர் வரும்.
விஸ்வநாதன், இந்திய கம்யூ., சிவகங்கை: மாவட்டத்தில் ஆறுகள், கண்மாய், குளங்களில் கருவேல் மரங்கள் வளர்ந்து, விவசாயமும், நீர்நிலைகளில் தண்ணீர் தேங்குவதுபாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை முற்றிலுமாக அழிக்க வேண்டும்.
கலெக்டர்: கோட்டாட்சியர்கள் மூலம் ஏலம் நடத்தி, கருவேல் மரங்கள்அகற்றப்பட்டு வருகின்றன. முற்றிலும் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணன், வழக்கறிஞர்,சிவகங்கை: மாவட்டத்தில் மணிமுத்தாறு, வைகை, சருகணி ஆறுகளின் கீழ் 10 சிற்றாறுகள் ஓடுகின்றன. இவற்றின் மூலம் 10,000 கண்மாய்கள் நிரம்பும். இந்த ஆற்று கால்வாய்களில் ஆக்கிரமிப்பை அகற்றி அவற்றை துார்வார வேண்டும். இதற்காக வாங்கிய 21 இயந்திரம் பயனற்று கிடக்கிறது.
முருகன், விவசாயி, குருந்தங்குளம்: மாடக்கோட்டையில் சிறிய, பெரிய கண்மாய்களில் 6 மடைகள் சேதமுற்றுள்ளன.
சிவராமன், திட்ட இயக்குனர், சிவகங்கை: கடந்த 2 ஆண்டாக கண்மாய் சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை. தற்போது சீரமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மாவட்ட அளவில் 1,147 மடைகள், 269 கலுங்குகள் சீரமைக்கப்பட உள்ளது.
சந்திரன், இந்திய கம்யூ., சிவகங்கை: பெரியாறு பாசன கால்வாய் மூலம் 2800 எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. காஞ்சிரங்காலில் இருந்து மறவமங்கலம் வரை செல்லும் பெரியாறு பாசன கால்வாய் சேதமடைந்துள்ளது.
கலெக்டர்: அரசாணைபடி தான் பெரியாறு அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்கு, தண்ணீர் பெற்று தருகின்றனர். இன்னும் கூடுதலாக தேவை என்றால், விவசாயிகள் கோரிக்கை வைத்தால், அரசின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அய்யாச்சாமி, விவசாயி, கீழநெட்டூர்: மாவட்ட அளவில் காவிரி கூட்டுகுடிநீர் உட்பட பல்வேறு குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயல்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கின்றன. குறிப்பாக இளையான்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
பாண்டிசுரேஷ், விவசாயி,புதுவயல்: புதுவயல் அருகே மெய்யனேந்தல்கண்மாய் கரையை உடைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழை நீர் தேங்காமல் வீணாவதின் மூலம் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெற முடியவில்லை.
கலெக்டர்: கண்மாய் கரையை உடைத்து ஆக்கிரமித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு உத்தரவுபடி கிராமப்புற விவசாய மின்மோட்டார்களுக்கு தினமும் 14.50 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குகின்றனர். கூடுதலாக நேரம் ஒதுக்க அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும், குறைதீர் கூட்ட அரங்கை கோயிலாகவும், கலெக்டர் உட்பட அதிகாரிகளை குறைதீர்க்கும் கடவுளாக எண்ணித்தான் மனு அளிக்கிறோம். ஆனால் பெரும்பாலான அதிகாரிகள், விவசாயிகளுக்கு வேறு வேலையின்றி ஒரு வெள்ளை பேப்பர் கிடைத்தால் மனுவுடன் வருவதாக அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டாக விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் தீர்வு காணவில்லை. கோரிக்கையின் உண்மை தன்மையை அறிந்து அதற்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.
கலெக்டர்: அனைத்து துறை அதிகாரிகளும், விவசாயிகளின் மனுக்களை பெற்று கவனமாக செயல்பட்டு வருகின்றனர். மனு மீது அலட்சியம் காட்டாமல் முழு ஈடுபாட்டுடன் தான் தீர்வு கண்டு வருகின்றனர். விவசாயிகள், அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!