ADVERTISEMENT
ஆர்.எஸ்.மங்கலம் : சுட்டெரிக்கும் வெயிலால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 52 மாவட்டங்களில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 675 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தனியார் மூலம் 93 சதவீதம் உப்பு உற்பத்தி நடக்கிறது. இந்திய அளவில் உப்பு உற்பத்தியில் குஜராத் அடுத்தபடியாக தமிழகத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக மற்ற மாவட்டங்களை விட ராமநாதபுரம் மாவட்டத்தின் பங்களிப்பு அதிகம் உள்ளது. உப்பு உற்பத்தி சீதோஷண நிலைக்கு ஏற்ற வகையில் 6 முதல் 9 மாதங்கள் நடக்கிறது.
கோடை மழை பெய்து விட்டால் உப்பு உற்பத்திக்கு ஏற்ற சீதோஷ்ண காலமான ஏப்., மே மாதங்களில் சில சமயங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் கோடை மழை குறைந்து உப்பு உற்பத்திக்கு ஏற்ற வெப்பத்தால் தேவிபட்டினம், கோப்பேரிமடம், வாலிநோக்கம், திருப்பாலைக்குடி உட்பட மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
பொதுவாக உப்பு உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவு ஏற்படுவதும், உற்பத்தி குறையும் போது விலை ஏற்றம் ஏற்பட்டாலும் டன் ரூ.900 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே உற்பத்தியாளருக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும், என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!