ADVERTISEMENT
கோஷ்டி மோதல் 19 பேர் மீது வழக்கு
திருமங்கலம்: மையிட்டான்பட்டி முத்தாலம்மன் கோவிலில் பல்வேறு காரணங்களால் 23 ஆண்டுகளாக திருவிழா கொண்டாடப்படவில்லை. 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு அனுமதியுடன் இந்தாண்டு 2 நாட்கள் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஊர் மக்கள் முளைப்பாரி எடுத்துச் சென்றபோது, இரண்டு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. தெய்வநாயகம் புகாரில் ஒரு தரப்பைச் சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த விஜய பாண்டியன் புகாரில் 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை கள்ளிக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
கோஷ்டி மோதல்: 6 பேர் கைது
திருமங்கலம: கூடக்கோவிலில் நேற்று முன்தினம் அசோக்குமார் என்பவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மாலையில் அவர்கள் வீட்டிற்கு கிளம்பி சென்ற போது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் டூவீலரில் வேகமாக 'பறந்தனர்'. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, 10 பேர் காயமடைந்தனர். அசோக்குமாரின் தாய் அமுதா 48, புகாரில் ஏழு பேர் மீது வழக்குப் பதியப்பட்டு அஜித்குமார், ராமர், கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மற்றொரு தரப்பைச் சேர்ந்த மருதுபாண்டி புகாரில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சேகர், பாண்டி, இந்திராவை கூடக்கோவில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவானோரை தேடி வருகின்றனர்.
வாகனங்கள் தொடர் மோதலில் ஒருவர் பலி
மேலுார்: நத்தம் காமராஜர் நகர் சவுந்திரபாண்டியன் 35, வேன் டிரைவர். நேற்று மாலை அழகர்கோவில், -மேலுாருக்கு வேனை ஓட்டிச் சென்றார் ஆயத்தாம்பட்டி அருகே முன்னால் லாரி நின்றிருந்தது. எதிர்திசையில் கார் வந்ததால், லாரியின் பின்னால் வேனை நிறுத்தினார். அதற்கும் பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை பஸ் வேன்மீது மோதியது. இதன்விளைவாக வேன் நகர்ந்து முன்னே நின்ற லாரி மற்றும் எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் வேன் டிரைவர் சவுந்திரபாண்டியன் இறந்தார். வேனில் வந்த மற்ற மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை பறித்த வாலிபர் கைது
சோழவந்தான்: மேலக்கால் பகுதி அம்பலம் மனைவி கருப்பாயி 67. கணவரின்றி தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர் கருப்பாயி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து தப்பினார். இதுதொடர்பாக இதே ஊரைச் சார்ந்த ஆறுமுகத்தை 27, கைது செய்து நகையை காடுபட்டி போலீசார் மீட்டனர்.
டூவீலர் மோதி பெண் பலி
வாலாந்துார்: சொக்கத்தேவன்பட்டி சுரேஷ் 20. கட்டட தொழிலாளியான இவர், டூவீலரில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நாட்டாபட்டி சென்ற போது, ரோட்டில் நடந்து சென்ற சந்திரா 65, மீது மோதியதில் அவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் கஞ்சா விற்றவர்கள் கைது
உசிலம்பட்டி: இங்குள்ள ரயில்வே பீடர் ரோட்டில் தனிப்பிரிவு போலீசார் டூவீலரில் வந்த அன்னம்பாரிபட்டி அரவிந்த் 29, மாமரத்துப்பட்டி அரவிந்தனை 32, சோதனையிட்டு பொட்டலங்களில் இருந்த 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இருவரும் டூவீலரில் சென்று வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்றது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!