விருதுநகர் : விருதுநகரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விதிமீறி செயல்படும் குவாரிகளை தடை செய்ய வேண்டும் , தடுப்பணையில் பட்டாசு கழிவு கலந்து நீர் அசுத்தமாகிறது என்றும் விவசாயிகள் புகார்களை தெரவித்தனர்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் கோயில்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட வழிகாட்டுதல், நெறிமுறைகள் குறித்த புத்தகங்களை அனைத்து வேளாண் உதவி அலுவலர்களுக்கும் வழங்கினர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
கணேசன்(சிவகாசி): கன்னிசேரி புதுார் அர்ஜூனா நதி குறுக்கே தடுப்பணை உள்ளது. இதில் பட்டாசு கழிவுகள் கலந்து தண்ணீர் தேங்குவதால் அசுத்தமாக காணப்படுகிறது. 5 ஊராட்சிகளுக்கு இந்த நீர் செல்கிறது.
மோகன்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்துார்): ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகத்தில் சந்தை அமைக்க வேண்டும்.
வேலுச்சாமி (விற்பனை குழு செயலாளர்): நிலம் கிடைத்தால் அங்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
விஜயமுருகன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான மண் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் மர்மநபர்கள் அதிகளவில் மண்ணை திருடி விற்கின்றனர். திருச்சுழி புலியூரான் கல்குவாரி, சிவகாசி பாரைப்பட்டி கல்குவாரிகளில் கண்மாய் பாதை, நீர்வரத்து பாதைகளை அடைத்து விதிகளை மீறி செயல்படுகின்றன. அவற்றை தடை செய்ய வேண்டும்.
ரவிக்குமார்(டி.ஆர்.ஓ.,) : கலெக்டருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமச்சந்திரராஜா (தமிழக விவசாயிகள் சங்கம்): சாத்துார் வெள்ளரிக்காய், ராஜபாளையம் பஞ்சவர்ணம் மா, விருதுநகர் கொடுக்காப்புளி, அதலக்காய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். பருத்தியை இநாம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ ஏலத்தை உழவர் சந்தையில் நடத்த வேண்டும்.
ராதாகிருஷ்ணன் (துணை இயக்குனர், தோட்டக்கலை): புவிசார் குறியீடு பெற வேளாண் பல்கலை உடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அம்மையப்பன்(ராஜபாளையம்): கோடை கால நேரடி கொள்முதல் நிலையம் துவங்குவது எப்போது.
பத்மாவதி (இணை இயக்குனர், வேளாண்துறை): ஜூன் மாதத்தில் துவங்கும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
முத்தையா (மம்சாபுரம்): பொதுப்பணித்துறை கண்மாய்களில் மீன்பாசி குத்தகையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என இருதுறையும் இல்லாது மீன் வளர்ப்புத் துறையினர் ஏன் உள்ளே வருகின்றனர். கண்மாய் கட்டுப்பாடு 3 ஆண்டுகள் வரை அவர்களுக்கு செல்வதால் கண்மாயை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். செண்பகதோப்பில் விவசாயிகளிடமும் ரூ.20 வாங்குகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஜெயசீலன் (கலெக்டர்): சனிக்கிழமையில் வாங்க வேண்டாம் என்று கூறினேன். கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கருப்பையா (திருச்சுழி): திருச்சுழி மணவராயனேந்தலில் பெரிய கண்மாய், சின்ன கண்மாய்களில் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும்.
இருளப்பன் (வத்திராயிருப்பு): பசுமாட்டுக்கு கடன் எங்கேயும் கொடுப்பதே இல்லை. கால்நடை வைத்திருக்கும் விவசாயிகள் கடும் சிரமத்தை சந்திக்கன்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!