நிலையான அதிகாரிகள் இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.மங்கலம் : குறிப்பிட்ட சில ஆண்டுகளாக நிரந்தரமாக பணியாற்றக்கூடிய அதிகாரிகள் இல்லாததால் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக, ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்.
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கவுன்சில் கூட்டம் தலைவர் ராதிகா தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., உம்முல் ஜாமியா, துணைத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
பாண்டி: ஆயங்குடி முதல் கருங்குடி வரை உள்ள சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சிறு பணிகளை கூட அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம்.
பிரபு: புல்லமடை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் 2 மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை. மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட சேதம் அடைந்த பல சாலைகளை சீரமைக்க வேண்டும்.
வெங்கடாஜலபதி: ஏ.ஆர்.மங்களம், வாகைக்குடி ரோட்டோர சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பொது நிதியில் பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
துணைத் தலைவர் சேகர்: கடந்த ஆறு மாதத்திற்குள் நான்கு ஆணையர் பொறுப்பேற்று பணி மாறுதல் பெற்றுள்ளனர். கூடுதல் காலம் பணியாற்றும் வகையில் நிரந்தர ஆணையாளர்கள் இல்லாததால் வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடுவது, அதற்கான ஆர்டர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆணையாளர்: கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் அளித்தால் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும்.
தலைவர் ராதிகா: கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!