சாத்துார் : சாத்துாரில் ரோடு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி 23வது வார்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எல்.எப். தெரு, எல்.எப். கிணற்றுத் தெரு, வெள்ளைக்கரை ரோடு, பங்களா தெரு, பங்களா குறுக்கு தெரு, முஸ்லிம் தெரு, ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது 23 வது வார்டு.
எல். எப். கிணற்றுத் தெருவில் குடிநீர் குழாய் , பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் ரோட்டில் போடப்பட்டிருந்த பேவர் பிளாக் சேதம் அடைந்து உள்ளது. இங்கு உப்பு தண்ணீர் அடிகுழாய் இல்லாததால் புழக்கத்திற்காக அதிக விலை கொடுத்து தண்ணீரை மக்கள் வாங்குகின்றனர்.
எல். எப்., தெருவில் பொது குடிநீர் கிணறு புதர் மண்டிய நிலையில் பராமரிப்பின்றி உள்ளது .இந்த தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேன்ஹோல் திடீரென இறங்கியதால் பள்ளம் ஏற்பட்டு அவ் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகின்றனர்.
வெள்ளைக்கார ரோட்டில் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடப்பதால் ரோடு முழுவதும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கொள்கின்றன. எல்.எப். கிணற்று தெருவில் உப்புத் தண்ணீருக்கான போர்வெல் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குடிநீர் பற்றாக்குறை
கண்மணியம்மா, குடும்பத் தலைவி: ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மினரல் வாட்டரை குடம் ஒன்று ரூ 12 கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கான சுகாதார வளாகம் செயல்படாமல் உள்ளது இதை சீரமைத்து தர வேண்டும்.
ரோடு தேவை
காசிராஜன், குடும்பத் தலைவர்: வெள்ளைக்கரை ரோட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வழியாகவே வார்டுக்குள் பெரும்பாலானோர் சென்று வருகின்றனர். மேலும் நகர் பகுதியில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு செல்லும் பாதையாகவும் இந்த ரோடு உள்ளது. ஆமை வேகத்தில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணி மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி காரணமாக பள்ளி வாகனங்கள் கூட இங்கு வர முடியவில்லை இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். திட்டப் பணிகளை விரைந்து முடித்து ரோடு போட வேண்டும்.
தடுப்பணையில் கழிவுநீர்
சண்முகசுந்தரம், குடும்பத் தலைவர்: வைப்பாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணை முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால் இரவில் மட்டுமின்றி பகலிலும் தூங்க முடியவில்லை. கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஆற்றில் சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மினரல் வாட்டர் பிளாண்ட் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரவில்லை இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான குடிநீர் கிடைக்கும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஏஞ்சல், கவுன்சிலர், தி.மு.க: பெண்கள் சுகாதார வளாகத்தை சீரமைக்கவும் ,ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டித் தரவும் மனு அளிக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம் தெரு பங்களா குறுக்கு தெரு களில் பேவர் பிளாக் ரோடு அமைத்து தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்து வருகிறேன். என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!