முதலீடே இன்றி தொழில் துவங்க வாய்ப்பு முன்கூட்டியே 35 சதவீத மானியம்
மதுரை ; அம்பேத்கார் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் முதலீடே இன்றி, முன்கூட்டியே வழங்கப்படும் மானியத்தின் மூலம் தொழில் தொடங்கலாம்.
மதுரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன் கூறியதாவது: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரிடையே தொழில் துவங்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நேரடி விவசாயம் தவிர உற்பத்தி, வணிகம், சேவை சார்ந்த தொழில்களை துவங்கலாம்.
ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன், இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் பட்டுபுழு வளர்ப்பு போன்ற தொழில்கள் துவங்கினால் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தொழில் துவங்குவோர் முதலீடு செய்ய தேவையில்லை.
அதற்கு பதிலாக அரசே 35 சதவீத மானியத்தை முன்கூட்டியே விடுவித்து விடும். 65 சதவீத கடனை வங்கியில் பெறலாம். வங்கிக்கடன் பெறாமல் சொந்த முதலீட்டில் தொழில் துவங்கினாலும் 35 சதவீத மானியம் உண்டு, என்றார்.
விண்ணப்பதாரருக்கு கல்வித்தகுதி தேவையில்லை. 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்படும். திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 0452 - -253 7621.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!