நயினார்கோவிலில் ஆமை வேகத்தில் வேளாண் அலுவலக கட்டுமான பணி
மூன்று ஆண்டாக நடக்கிறது
நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவிலில் புதிய வேளாண் அலுவலக கட்டுமான பணி மூன்றாண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் நிலையில் பழைய அலுவலக கட்டடத்தில் பாம்புகள் படையெடுப்பதால் அலுவலர்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் பின்புறம் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனை விரிவாக்கம் மையம் செயல்படுகிறது.
உதவி இயக்குனர் தலைமையில் செயல்படும் இந்த அலுவலகத்தின் கீழ் 10 ஆயிரம் ஏக்கர் வரை நெல் விவசாயம் நடக்கிறது. மேலும் ஆண்டு முழுவதும் பருவத்திற்கு ஏற்ப மிளகாய், பருத்தி, சிறு தானியங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இதனால் நாள் முழுவதும் இங்கு விவசாயிகள் வந்து செல்வர். இந்த அலுவலக கட்டடம் கட்டி 50 ஆண்டுகள் கடந்த நிலையில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
தரைதளம் உட்பட ஒட்டு மொத்தமாக இடிந்து வருவதால் அருகில் உள்ள வயல்வெளிகளில் இருந்து அடிக்கடி பாம்புகள் படையெடுக்கின்றன. இதனால் விவசாயிகள், அலுவலர்கள் அச்சத்துடன் உள்ளனர். நேற்று முன் தினம் 4 பாம்புகள் பிடிக்கப்பட்ன.
இத்துடன் வேளாண் பொருட்களை பாதுகாப்பதிலும் சிக்கல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு நயினார்கோவில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியில் நவீன வேளாண் அலுவலக கட்டடம் பணி துவங்கியது.
பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் பழைய கட்டடத்திலேயே அலுவலகம் செயல்படும் நிலை உள்ளது. விவசாயிகள் மற்றும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய கட்டடம் பணியை விரைந்து முடித்து திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!