மதுரை : மதுரை மாநகராட்சி வார்டு 50 ல் சிம்மக்கல் 1 முதல் 7 தெருக்கள், அனுமார் கோயில் படித்துறை, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு தெரு, அக்ரஹாரத்தெரு போன்றவற்றில் எல்லா வார்டுகளையும் போலவே பராமரிப்பு இல்லாத சாலைகள், பாதாள சாக்கடை, சாக்கடை கலந்த குடிநீர் என அடிப்படை தேவைகளில் நிறைய பிரச்னைகள் உள்ளன. இதுபற்றி பொது மக்கள் கூறியதாவது;
தெருநாய்கள் தொல்லை அதிகம்
சரஸ்வதி, அனுமார் கோயில் படித்துறை: சாரதா வித்யாவனம் பள்ளி அருகே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வேகத்தடை தேவையில்லை என்ற நிலை உள்ளது. இதில் வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது, சிலநாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே குடிக்க பயன்படுத்த முடியாமல் குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம். தெரு நாய்கள் தொல்லை அதிகம் இருக்கிறது.
குடியிருப்பை ஆக்கிரமிக்கும் கால்நடைகள்
நாகலெட்சுமி, லெட்சுமி நாராயண அக்ரஹாரம்: கோயில்தெரு பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகளில் கால்நடைகளை திரிய விடுவதால் அப்பகுதி சுகாதார கேடாக உள்ளது. சில வாரங்களாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது, குடிநீரை விலை கொடுத்து வாங்குவதால் மன வேதனை அளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. குப்பை வண்டி வராததால் சாலையில் குப்பை கொட்டுகின்றனர். கொசுத் தொல்லை அதிகம் உள்ளது, இப்பகுதி பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமரா இல்லை என்பது பெருங்குறையாக உள்ளது.
முடிந்தவரை நடவடிக்கை எடுக்கிறேன்
கவுன்சிலர் (தி.மு.க.) இந்திராகாந்தி : மக்கள்கள் கூறிய குறைகள் ஏற்கக்கூடியதே. நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு தந்துள்ளோம். வார்டுகளில் தேவையான இடங்களில் சாலைகள், பாதாள சாக்கடை சீரமைப்பு, குடிநீர் குழாய்கள் அமைத்து கொடுத்துள்ளோம். பொதுமக்களின் தேவைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். இன்னும் பிரச்னை உள்ள தெருக்களை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர், பாதாள சாக்கடை, துாய்மைப்பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றை தெரிவித்துள்ளோம். முடிந்தவரை குறைபாடுகளை விரைந்து சரி செய்ய முயற்சி எடுப்பேன்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!