Load Image
Advertisement

காலையில் அக்னி நட்சத்திரம்; மாலையில் கோடைமழை

ஈரோடு,-ஈரோட்டில் காலை வேளை தொடங்கி மதியம் வரை 'அக்னி நட்சத்திரம்' வெயில் வாட்டி எடுக்க, மாலையில் 'கோடைமழை' பெய்து, சூழலை சற்றே இதமாக்குகிறது இயற்கை. மனிதர்களிடம் இருந்து கற்கிறதா அல்லது மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கிறதா என்று, கேள்வியை எழுப்ப வைக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் மார்ச் மாத தொடக்கம் முதலே, வெயிலின் தாக்கம் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தினமும், 100 டிகிரி அளவு பாரன்ஹீட் பதிவாகி, மண்டையை பிளந்தது. இதை தொடர்ந்து அக்னி நட்சத்திரம் கை கோர்க்க, வீட்டிலேயே பகலில் மக்களை முடக்கும் வகையில் சூரிய பகவான் வெப்ப தாக்குதலில் ஈடுபட்டார். அவ்வப்போது பெய்யும் கோடை மழையே, ஓரளவுக்கு ஆறுதல் தந்தது. அதுவும் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்தது. ஈரோட்டில் நேற்றும் 'அக்னி நட்சத்திர' வெயில் வாட்டியது. சாலைகள் அக்னி குண்டமாக மாற, மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வீடுகளில் முடங்கினர். அவ்வப்போது அனல் காற்றும் வீச, மாநகர சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது.
இந்நிலையில் மாலை, 4:30 மணிக்கு பிறகு, மாநகரில் இடியுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக 'கோடை மழை'கொட்டி தீர்த்தது. இதனால் மாநகரில் தாழ்வான பகுதிகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, கருங்கல்பாளையம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் சிரமப்பட்டனர். புறநகர பகுதிகளான சோலார், வெண்டிபாளையம், கஸ்பாபேட்டை, 46 புதுார், லக்காபுரம், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. காலையில் வெயிலால் முடங்க வைத்து, மாலையில் மழையால் மனிதர்களை அடங்க வைக்கும் இயற்கையின் ப(பா)டத்தை, மனிதர்களால் எப்படி கணிக்க முடியும்?


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement