ராஜராஜ சோழன் சூடாமணி விகாரத்தில் சிகிச்சை பெற்றாரா?

கல்கியின், 'பொன்னியின் செல்வன்' நாவலிலும், மணிரத்தினத்தின் 'பொன்னியின் செல்வன் -- 2' திரைப்படத்திலும், பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழன், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளால் கடலில் மூழ்கடிக்கப்படுவார்.
அவரை, மீனவப் பெண்ணான பூங்குழலி மீட்டு, நாகப்பட்டினம் சூடாமணி விகாரத்தில் சிகிச்சைக்கு சேர்ப்பார். அங்குள்ள புத்த பிட்சுகள் அவரை காப்பாற்றுவர்.
இதைப் பார்த்தபின், சூடாமணி விகாரத்தை தேடி, பலரும் நாகப்பட்டினம் செல்வதுடன்,அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வான முகமது ஷானவாசிடமும் தகவல் கேட்கின்றனர்.

இதையடுத்து, அவர், மத்திய தொல்லியல் துறையின், தென்னிந்திய ஆலய பாதுகாப்பு பிரிவில், அந்நகரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி கேட்டிருந்தார்.
அப்பிரிவின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினர், அங்கு ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
இன்றைய நாகப்பட்டினம் மிகவும் பழமையான நகரம். 'சோழர்குலவல்லிப் பட்டணம்' என்ற பெயருடைய இது, சோழர்களின் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகராக இருந்துள்ளது.
இதை வெளிநாட்டு பயணியரும், அறிஞர்களும் பல்வேறு பெயர்களில் குறித்துள்ளனர்.
அதன்படி, தாலமி என்பவர், 'நிகமா' என்றும்; இட்சிங் என்பவர், 'நாகவதனா' என்றும்; மார்கோபோலோ என்பவர், 'ப தான்' என்றும்; ராஷிதுத்தா என்பவர், 'மாலிபதான்' என்றும்; கல்யாணியின் சாளுக்கிய கல்வெட்டுகளில், 'நவுடாபட்டனா' என்றும் குறிக்கப்பட்டுள்ளன.
ராஜராஜனின் பெரும்படை தெற்காசிய நாடுகளைக் கைப்பற்றிய பின், அந்த நாடுகளுடன் ஏற்பட்ட சமய, வணிக, கலாசார நல்லுறவுகளுக்கு சான்றாக இந்த நகரம் இருந்துள்ளது.
முக்கிய சான்றாக, ராஜராஜ சோழன் கட்டிய சூடாமணி வர்ம விகாரத்தைக் கூறலாம். இது, மியான்மர்,சுமத்ரா தீவுகளை ஆண்ட சைலேந்திர மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கன் விருப்பப்படி, அவன் தந்தையான சூடாமணி வர்மன் பெயரில் கட்டப்பட்டது.
இதில், சோழநாட்டிற்கு வந்த புத்தமத துறவிகள், வணிகர்கள் தங்கி வழிபட்டனர். சுமத்ரா தீவு மற்றும் ஜாவா நாட்டு கட்டடக்கலையுடன், மூன்றடுக்காக இருந்த இதை, 'சீன பகோடா' என்றனர்.
இதன் தொடர் செயல்பாடுகளுக்காக சோழ மன்னர்களான ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன் ஆகியோர், பல்வேறு தானங்களை அளித்துள்ளனர். அவற்றில் முக்கியமானது, 'ஆனைமங்கலம்' என்ற ஊரை தானமாக அளித்ததை, ஆனைமங்கலம் செப்பேடு விரிவாக கூறுகிறது.
அதேபோல, பவுத்தர்களான கடாரத்தரையனின் அதிகாரி ஸ்ரீ குருத்தன் கேசவனான அக்ரலேகை, ஸ்ரீ விஷயத்தரையன் கண்டனிமலன் அகத்தீஸ்வரன் ஆகியோர், இங்குள்ள பழமையான 'காயாரோகணர்' சிவன் கோவிலுக்கு, சீன கனகம் எனும் தரமான தங்கம், முத்து, வைரம், மாணிக்கம் பதித்த அணிகலன்கள், பலவிதமான விளக்குகளை தானமாக அளித்துள்ளனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சூடாமணி விகாரம், நகரத்தில் இருந்து விலகி அமைதியான கடற்கரை ஓரம் அமைந்திருந்தது. இதை, புத்துவெளிக்கோபுரம், பழைய பகோடா, கருப்பு பகோடா என்றனர்.
அங்கு, மதம் பரப்ப வந்தஇயேசு சபை பாதிரியார்கள், 1867ல், இதை இடித்து, தங்களுக்கான கட்டடம் கட்ட அனுமதி பெற்றனர்.
இதையடுத்து, அங்கு, பாதிரியார்களுக்காக, இந்தோ செராசனிக் முறையில் கட்டடம் கட்டப்பட்டது. பின், அது சிறப்பு நீதிமன்றமாக செயல்படத் துவங்கியது. அந்தபகுதி தற்போது வெளிப்பாளையம் என்ற பெயரில், நகரின் மையப்பகுதியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தகவல்கள் இல்லை
ராஜராஜன், கடலில் மூழ்கி மீண்டது குறித்த தகவல்களோ, பூங்குழலி, நந்தினி குறித்தோ, சிகிச்சை குறித்தோ கல்வெட்டு தகவல்கள் இல்லை. நாவலின் சுவாரஸ்யத்துக்காக, கல்கி அவற்றை சேர்த்திருக்கலாம்.
- அமர்நாத் ராமகிருஷ்ணன்,
வரலாற்று ஆய்வாளர்.
முதல்வரிடம் பேசுவேன்
நாகையின் பழமையான கோவில்கள், நீதிமன்ற வளாகம், அருங்காட்சியகம், டச்சு கல்லறை உள்ளிட்ட இடங்கள் குறித்து, அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தந்துள்ளார். இங்கு அடுத்தக்கட்ட ஆய்வுகளை செய்யவும், புதிய அருங்காட்சியகம் அமைக்கவும், முதல்வரிடம் வலியுறுத்துவேன்.
- ஷானவாஸ்,
வி.சி., - எம்.எல்.ஏ., நாகை தொகுதி.
வாசகர் கருத்து (15)
தம்பி - கஞ்சி குடிப்பதை பெருமையா சொல்லிட்டாயே
ஒருமுறை இடது கைவீக்கத்துக்கு அங்கு தான் பரசிட்டமோல் மருந்து வாங்கி சாப்பிட்டார்
நாக பட்டினம் புத்தர் கோவிலை கொள்ளையடித்து தங்க புத்தர் சிலையை களவாடினது யாருன்னு தெரியுமா?
கதையின் ஸ்வாரஸித்திர்க்காகா கதையய் பிறழ்ந்து எழுதுவது தவரானாமுன் உதாரணம். சினிமா எடுக்கும் போதாவது உண்மையை நிலைய கண்டறிந்து சும்மா சினிமாவிற்காகா கொஞ்சம் மசாலா சேர்த்து செய்யும் போனது மக்களுக்கு நான்கிங்க்கு உணராத வேண்டும் பணம் பண்ணும் சாக்கில் போராய்ய்யய் உண்மையாக்க முயலுவது தாவரானா செயல்.
சரித்திரத்தை அவர் பெருமளவு மாற்றவில்லை ... அப்படியே சரித்திரத்தைக் கதையாக எழுதினால் அதில் சுவாரஸ்யம் இராது ....
மதம் பரப்ப வந்தஇயேசு சபை பாதிரியார்கள், 1867ல், இதை இடித்து, தங்களுக்கான கட்டடம் கட்ட அனுமதி பெற்றனர் .... அனுமதி கொடுத்த கருங்காலி யாரு ????
1867 ல் ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள்.
வேலை வெட்டி இல்லாதவர்கள் பூனையை உக்காரவைத்து மழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பரசண்டிகள்.