எழுத வேண்டிய கதைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன!
''புதிய எழுத்தாளர்கள் மண்ணோடும், மக்களளோடும் தொடர்புடைய கதைகளை எழுத வேண்டும்.'' என, சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசினார்.
கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், சிறுகதையிலரங்கம் கல்லுாரி அரங்கில் நடந்தது.
ஒரு நுாற்றாண்டு கால சிறுகதை வரலாற்றின் பரிணாமம் வளர்ச்சி மற்றும் அதன் இலக்கிய முக்கியத்துவம் குறித்து, எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், எம்.கோபாலகிருஷ்ணன், பவா செல்லத்துரை, ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசியதாவது:
புனைவு இலக்கியம் என்பது, படைப்பாளியில் மன உணர்வில் இருந்தும், வாழ்வியல் அனுபவங்களில் இருந்தும் உருவாகக் கூடியதாகும்.
கதை எழுதுவர்கள் தனித்துவமான உரைநடை மொழியையும், உத்தியையும், கையாள வேண்டும். கல்விக் கூடங்களில் கற்பிக்கும் பாட மொழியில் கதைகள் எழுதக்கூடாது.
புழக்கத்தில் பயன்படுத்தி தேய்ந்த சொற்களை, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. புதிய எழுத்தாளர்கள் மண்ணோடும், மக்களளோடும் தொடர்புடைய கதைகளை எழுத வேண்டும்.
ஒரு சாதாரண காட்சி அல்லது ஒரு சிறிய அனுபவம், சிறந்த கதைக்கான கருவாக அமைந்து விடும். வாழ்வின் எந்த தருணத்திலும் கதைக்கான சூழல் உருவாகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் பேசுகையில், '' தமிழில் சிறுகதை இலக்கியம் தோன்றி, 110 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலத்துக்குள் பல எழுத்தாளர்களால் பல ஆயிரம் சிறுகதைகள் எழுப்பட்டுள்ளன.
இதை தாண்டி இனி கதைகள் எழுத என்ன இருக்கிறது என்று புதிய எழுத்தாளர்கள் நினைக்க கூடாது.
இந்த நவீன காலத்தில் புதிய கோணத்தில், புதிய அர்த்தத்தில் கதைகள் எழுத ஏராளம் இருக்கின்றன,'' என்றார்.
கல்லுாரி முதல்வர் விஜிலா கென்னடி, இணை முதன்மையர் ராமசாமி, தமிழ்த்துறை தலைவர் சு.வேணுகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!