Load Image
Advertisement

அர்ச்சகரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு உதவி கமிஷனருக்கு விதித்த சிறை ரத்து

சென்னை:கோவில் அர்ச்சகரிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், கோவில் உதவி கமிஷனருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலின் உதவி கமிஷனராக டி.விஜயகுமார் பணியாற்றினார். ராஜ கணபதி கோவிலும், இவரது கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. உதவி கமிஷனராக பதவியேற்றதும், ராஜ கணபதி கோவில் குருக்களை அழைத்து, மாதம் தோறும் மாமூல் தரும்படி கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போராட்டம் நடத்திய குருக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சரவண குருக்கள் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜயகுமாருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஜயகுமார் மேல்முறையீடு செய்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரியாஸ், ''புகார் அளித்தவர், வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்து விட்டார். பணம் கேட்டதாகவும், பெறப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, புகார் அளித்தவரிடம் விசாரிக்கவில்லை. இந்த வழக்கில், எந்த ஆதாரமும் இல்லை. நேரடி சாட்சியமும் இல்லை. சந்தர்ப்ப சாட்சியமும் இல்லை,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கைப் பொறுத்தவரை, புகார் அளித்தவர் இறந்து விட்டதால், அவரை விசாரிக்க முடியவில்லை; நேரடி சாட்சியமும் இல்லை. சந்தர்ப்ப சாட்சியங்களும், விஜயகுமார் பணம் கேட்டதாகவோ, பெற்றதாகவோ நிரூபிக்கவில்லை.

லஞ்சம் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. எனவே, சேலம் நீதிமன்றத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement