இன்று பூக்கள் பூக்கும் தருணம்! கொடிசியாவில் இளைஞர்களின் ஆடுகளம்
'மறந்துட்டியா...'
அழுக்கில்லாத அழகான கூவம் ஆற்றின் நடுவில், நீள் படகில் தனக்காகத் துடுப்புப் போடும் ஒரு தமிழ் இளைஞனிடம், அந்த ஒற்றைத் தமிழ் வார்த்தையை, அந்த ஆங்கிலேயப் பெண் அழகாக உச்சரிக்கும் கணத்தில்...'தான தோம் தனன...தான தோம்தனன...தானன்ன...னானா...' என்று தபேலாவுடன் சேர்ந்து ஒலிக்கும், அந்த 'ஹம்மிங்'கை எந்தத் தருணத்தில் நினைத்தாலும், மனசு சில்லிட்டு விடும்...
அது... பூக்கள் பூக்கும் தருணம்!
அதற்கு முன் வெயிலிலேயே, 'உருகுதே மருகுதே' என்று எல்லோரையும் இசையில் உருக விட்ட அந்த இசை இளவல்தான், ஜி.வி.பிரகாஷ் குமார். மெலடியில் இதயங்களை மிதக்க விட்ட அதே ஜி.வி.பிரகாஷ்தான், 'வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா' என்று 'குத்து'ப்பாட்டிலும் வெளுத்து வாங்கியிருப்பார்.
அதனால் இன்றைய இளசுகள் வட்டத்தையும் தாண்டி, நடுத்தர வயதுடையவர்களையும் ஈர்த்திருக்கிறவர் ஜி.வி.பி.,
மற்றொரு புறத்தில் 'டார்லிங்', பச்சை வெள்ளை சிவப்பு என பல படங்களிலும் யதார்த்தமான இளைஞனாக வாழ்ந்து காட்டி, தன் நடிப்புக்காகவும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரையும், ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
இளையராஜா துவங்கி, ரஹ்மான், யுவன், அனிருத் என அனைத்து இசை ஜாம்பவான்களும், பாடகர்களும் சென்னைக்கு அடுத்ததாக, கச்சேரிக்குக் கால் பதிக்குமிடம் கோவையாகத்தான் இருக்கிறது.
கோவையில் பொழுதுபோக்கிடம் குறைவு என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அமோக வரவேற்பு இருக்கும் என்பதும், இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அந்த வரிசையில்தான், இன்றைக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரின், 'ஆயிரத்தில் ஒருவன்' இசை நிகழ்ச்சியும், கொடிசியா மைதானத்தில், இன்று மாலையில் அரங்கேறவுள்ளது. நேற்று மாலையே, 'ஆன்லைன்' பதிவுகளில் அநேக டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இன்றும் டிக்கெட்டுக்கு ஏகப்பட்ட போட்டி நடக்கும்.
கோவை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் இணைந்து வசிக்கிற நகரமாகி விட்டது. முக்கியமாக, இங்கே கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில மாணவர்களும் நிறைய இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இது போன்ற 'மியூசிக் கான்செர்ட்'கள், ஆடித்தீர்ப்பதற்கான ஒரு பண்டிகைதான். ஜி.வி.பிரகாஷ் இசை மழையில், கோவை எப்படி நனையப் போகிறதோ...ஆனால் இன்று மாலை ஆறு மணிக்கு மேல், நம்ம ஊரு 'யூத்'களுக்கு, கொடிசியா மைதானம்...'ஆடுகளம்'தான்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!