கேரளா, இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் மனிதர்களைக் கொன்று, பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்த அரிசிக்கொம்பன் எனும் காட்டு ஆண் யானையை ஏப்., 29ல் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் உள்ள முல்லைக்கொடி பகுதியில் விட்டனர்.
அதன் கழுத்தில், 'சாட்லைட் ரேடியோ காலர்' பொருத்தப்பட்டது. இதன் மூலம், யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
முல்லைக் கொடியில் இருந்த அரிசிக்கொம்பன், ஓரிரு நாட்களில் தமிழக எல்லையான மேகமலை வனப்பகுதிக்குள் நுழைந்தது.
அங்கு, தமிழக வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு மீண்டும் கேரள வனப்பகுதிக்குள் விரட்டினர்.
லோயர் கேம்ப்
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, தமிழக வனப் பகுதிக்குள் நுழைந்தது.
நேற்று அதிகாலையில், பெரியாறு மின் நிலைய பகுதிக்கு அருகில் உள்ள தேக்கங்காட்டில் முகாமிட்டது. இதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் அச்சமடைந்து வெளியில் வர தயக்கம் காட்டினர்.
குமுளி மலைப் பாதையை ஒட்டி யானை இருந்ததால் நேற்று பகல் 12:00 மணியிலிருந்து மாலை 3:00 மணி வரை மலைப்பாதையில் வாகன போக்குவத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
தேனி டி.எப்.ஓ., சமர்த்தா, கூடலுார் ரேஞ்சர் முரளிதரன், கம்பம் மேற்கு ரேஞ்சர் அன்பு தலைமையிலான வனத்துறையினர் யானை செல்லும் பகுதியை கண்காணித்து வந்தனர். கழுதை மேடு புலத்தில் விளைநிலங்களுக்குள் யானை புகுந்தது.
விவசாயிகளுக்கு தடை
கழுதை மேடு, பெருமாள் கோவில் உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ள விளைநிலங்களில் விவசாய பணிகள் செய்து கொண்டிருந்த அனைவரையும் வெளியேற்ற உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி தலைமையிலான வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் தடை விதித்துள்ளனர். கழுதைமேட்டில் 'ஹார்வெஸ்ட் பிரஸ் பார்ம்ஸ்' என்ற தனியார் பண்ணை உள்ளது.
நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் அப்பகுதிக்குள் நுழைந்த யானை அங்கிருந்த மாதுளம்பழம், நெல்லிக்காய் உள்ளிட்ட மரங்களில் பழங்களை ருசி பார்த்து அங்கேயே நிற்கிறது.
குடியிருப்பு பகுதிக்குள் நுழைய விடாமல் யானையை தடுத்து மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!