வருமான வரித்துறை சோதனை குறித்து தகவல் இல்லை: கரூர் எஸ்.பி.,
தனியார் 'டிவி'க்கு அவர் அளித்த பேட்டி:
கரூரில், வருமான வரித்துறையினர் சோதனை குறித்து, முன் கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து, நாங்கள் தெரிந்து கொண்ட பின், பாதுகாப்புக்கு போலீசார் அனுப்பப்பட்டனர்.
வருமான வரித்துறையினர் மீது, தாக்குதல் குறித்து புகார் அளித்தால் சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரித்துறையினர் சோதனை செய்தால், பாதுகாப்புக்காக இரண்டு ஏ.டி.எஸ். பி.,க்கள், ஐந்து டி.எஸ்.பி.,க்கள், ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 180 போலீசார் தயார் நிலையில் இருப்பர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை எதிர்பார்ப்பு
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தி.மு.க.,வினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
வருமான வரித்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழக காவல் துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வராததால், பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறையினர் வந்தது, தி.மு.க., வினருக்கு மட்டும் தெரிந்து உடனே சோதனை நடக்கும் இடத்தில் கூட்டம் சேர்ந்த போது, உடனே போலீசார் விரைந்து செல்லாதது ஏன்?
சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விபரங்கள், பணம், நகை ஆகியவற்றை பதுக்க, வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.
வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட தி.மு.க.,வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வருமான வரித்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட எஸ்.பி., மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!