போலீஸ் செய்திகள்
கள் விற்றவர் கைது
நெகமம், கக்கடவு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பிரபுராம், 25. சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனைக்காக வைத்திருந்தார். இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தினேஷ்பிரபுராமை விசாரித்ததில் கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்து, 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பூட்டை உடைத்து நகை திருட்டு
பொள்ளாச்சி, வெங்கடேசா காலனியை சேர்ந்த டிரைவர் நடராஜன்,55. இவர், கடந்த, 24ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் அரவக்குறிச்சி சென்றார். நேற்று வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது, பீரோவில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன.பீரோவில் இருந்த, ஒரு பவுன் கம்மல், 10 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு லேப்டாப் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கூலித்தொழிலாளி தற்கொலை
பொள்ளாச்சி, ரமணமுதலிபுதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹக்கீம்,29. இவருக்கு திருணமாகி ஏழு ஆண்டுகளாகிறது. ஆறு வயதில் மகன் உள்ளார். மது பழக்கத்தால் கடந்த நான்கு மாதங்களாக வேலைக்கு செல்லாமல், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
இருசக்கர வாகனங்களை அடமானம் வைத்து செலவு செய்தார். வாங்கிய கடனை அடைக்க முடியாததால், வீட்டின் படுக்கறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பஸ் மோதி முதியவர் பலி
உடுமலை, எஸ்.வி.,புரம், கணேசபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி,74. நேற்று காலை, 11:00 மணிக்கு, வெஞ்சமடை அருகே, ரோட்டை கடக்க முயன்ற போது, அவ்வழியே பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது. படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!