வீடுகளின் குறைந்தபட்ச விலை திடீர் உயர்வு: சதுர அடி ரூ.4,000 ஆனது
சென்னை பெருநகரில் அடுக்குமாடி திட்டங்களில், வீடுகளின் குறைந்தபட்ச விலை, சதுர அடி, 4,000 ரூபாயை தாண்டியுள்ளதாக கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.
சென்னை பெருநகரில் ஊரடங்கு காலத்தில், வீடு வாங்குவதை தள்ளி வைத்த பலரும், தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு ஏற்ப கட்டுமான நிறுவனங்களும் ஏற்கனவே துவங்கிய திட்டங்களில், பணிகளை முடிப்பதில் ஆர்வம் காட்டின.
கடந்த, 2022 பிற்பகுதியில் துவங்கி தற்போது வரை, வீடுகள் விற்பனை ஏறுமுகமாக உள்ளது. இதே சமயத்தில் புதிய திட்டங்களின் வருகையும் வெகுவாக உயர்ந்துள்ளது.
இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:
தொழில் நிறுவனங்கள் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சென்னையில் வீடுகள் விற்பனை, வெகுவாக அதிகரித்து வருகிறது. நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், வீடு வாங்கும் நகரங்களின் வரிசையில், சென்னை பிரதான இடத்தை பிடித்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பிரதான சாலைகளில் இருந்து சற்று தொலைவில் உள்ள பகுதிகளில், வீடுகளின் குறைந்தபட்ச விலை சதுர அடி, 3,500 ரூபாய் முதல் துவங்கியது.
ஆனால், தற்போது, குறைந்தபட்ச விலை, சதுர அடி, 4,000 ரூபாயை தாண்டியுள்ளது. இதில் கூடுதல் வசதிகள், சூப்பர் பில்டப் ஏரியா உள்ளிட்டவற்றை சேர்க்கும் போது, விலை மேலும் அதிகரிக்கும்.
அதே நேரம், பழைய மாமல்லபுரம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை, கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் குறைந்த பட்ச விலை, 6,148 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காரணம் என்ன?
இது குறித்து இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி ராமபிரபு கூறியதாவது:
சென்னையில், முன் எப்போதும் இல்லாத வகையில், வீடுகளின் குறைந்தபட்ச விலை உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்துக்கு பின், நிலத்தின் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது.
டி.எம்.டி., கம்பிகள், எம் சாண்ட், மணல், சிமென்ட் மற்றும் அது சார்ந்த பிற பொருட்களின் விலை, 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பணியாளர் செலவும், முன் எப்போதும் இல்லாத வகையில், 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.
வீடுகளின் விலை உயர்வுக்கு இவையே பிரதான காரணமாக உள்ளன. இருப்பினும், வீடுகளின் தேவை அதிகரிப்பு, வாங்குவதில் மக்களின் ஆர்வம் காரணமாக, இந்த விலை உயர்வு சமாளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!