வரும் ஞாயிறன்று டில்லி புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், சபாநாயகருக்கு அருகே வைக்கப்பட உள்ள செங்கோலுக்கு ஒரு வரலாறு இருக்கிறது.

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கும் தருணத்தை, எப்படி அடையாளப்படுத்துவது என்பது குறித்து நேரு, ராஜாஜியிடம் கேட்டார். ராஜாஜியும், தமிழகத்தில், மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் நிகழும்போது, ராஜகுருவிடம் இருந்து செங்கோல் பெறும் மரபு இருப்பதை எடுத்துச் சொல்லிஉள்ளார்.
அதேபோன்று, மவுன்ட் பேட்டனிடம் இருந்து ஆட்சியதிகார மாற்றத்தை ஒரு செங்கோல் வழியாகச் செய்யலாம் என்பதை ஒப்புக் கொண்டார் நேரு. ராஜாஜி, நேரடியாக, தமிழகத்தின் முக்கிய ஆதீனங்களில் ஒன்றான, திருவாவடுவதுறை ஆதீனத்தைத் தொடர்புகொண்டு விபரம் தெரிவித்தார். அப்போது, ஆதீனகர்த்தராக இருந்தவர் அம்பலவாண தேசிகர் மூர்த்தி. அவர், தன் உதவியாளர்கள் வாயிலாக, சென்னையில் இருந்த உம்மிடி பங்காரு செட்டி நகைக் கடையில், ரிஷபம் அமர்ந்த நிலையில் விளங்க, வெள்ளியில் தங்க முலாம் பூசிய செங்கோல் செய்யச் சொன்னார்.
அம்பலவாண தேசிகர் மூர்த்தி உடல்நலம் குன்றியிருந்ததால், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளைத் தம்பிரானான சடைச்சாமி என்ற திருவதிகை குமாரசாமித் தம்பிரானும், மடத்தின் ஓதுவா மூர்த்தியான மாணிக்கம் ஓதுவாரும், மடத்தின் நாதசுவர வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை குழுவினரும், மேலும் மடத்தின் முக்கிய நிர்வாகிகளும், ராஜாஜி ஏற்பாடு செய்த தனி விமானத்தில் டில்லி சென்றனர்.

ஆகஸ்ட், 14, 1947, இரவு 10:35 மணி வாக்கில், ஜவஹர்லால் நேருவின் இல்லத்தில், குமாரசாமித் தம்பிரான், நேருவுக்கு சால்வை அணிவித்து, செங்கோலை நேருவிடம் வழங்கினார். அப்போது, கோளறு பதிகத்தின் 11 பாடல்களும் பாடப்பட்டன. ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையும் பொழிந்தது.

அதன் பிறகு, வரலாற்று சிறப்பு மிக்க செங்கோல் மற்றும் அதன் அதன் முக்கியத்துவம் மறக்கப்பட்டு, அலகாபாத் அருங்காட்சியகத்தில் தவறான தகவலுடன் வைக்கப்பட்டது. அந்த செங்கோல், ‛நேருவிற்கு பரிசாக அளிக்கப்பட்ட தங்க கைத்தடி' என குறிப்பிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
கடந்த 1978 ல், காஞ்சி மடத்தில் நடந்த சுதந்திர தினத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், செங்கோல் குறித்து பேசவே, அது மீண்டும் மக்களின் கவனத்திற்கு வந்தது. கடந்த ஆண்டும், செங்கோல் குறித்த விஷயங்கள் மீண்டும் மீடியாக்களில் பேசுபொருள் ஆனது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறுகையில், இந்த செங்கோல் குறித்த கட்டுரையை, தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரபல நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம், அதனை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்து, வரலாற்று சிறப்பு மிக்க செங்கோலை கண்டுபிடிக்கும்படி கோரிக்கை வைத்து இருந்தார்.
இதன் அடிப்படையில், அலகாபாத் ஆனந்த் பவனில் இருந்து எடுத்து வரப்பட்டு, புதிய பார்லிமென்ட்டின் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்பட உள்ளது எனக்கூறினார்.
இது குறித்த தகவலை அறிந்த சமூக வலைதளவாசிகள், இத்தனை நாட்களாக புனிதமான செங்கோலை, முன்னாள் பிரதமரின் தங்க கைத்தடி எனக்கூறி அலகாபாத் அருங்காட்சியகம் வைத்து இருந்தது. எவ்வளவு அவமானகரமான செயல். இந்த செங்கோலை வெளியே கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதற்காக தமிழர்கள் எப்போதும் பெருமைப்படுவார்கள் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆதாரம் இல்லை.
செங்கோல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட, சென்னையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் ஆக.,1947 ல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை. ஆனால், ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரம் இந்தியாவுக்கு மாற்றப்படும் அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
மவுண்ட்பேட்டன், ராஜாஜி, நேரு ஆகியோர் அவ்வாறு விவரித்ததாக ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படுவது பொய்யானது.
செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக சிலர் கருதி, அது வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு அதனை மோடி ஆதரவாளர்கள் ஊடகங்களில் முழங்கி வருகின்றனர். நேருவுக்கு கொடுக்கப்பட்ட செங்கோல், பின்னர் அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது.
தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு இருக்கும் அரசியல் காரணங்களுக்காக பிரதமரும் , அவரது ஆதரவாளர்களும் செங்கோல் விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள். இவர்கள், தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப உண்மையை திரிக்கிறார்கள். புதிய பார்லிமென்ட் கட்டடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை திறந்து வைக்க ஏன் அழைக்கவில்லை என்பது தான் உண்மையான கேள்வி?. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
அமித்ஷா கண்டனம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிக்கையில், ‛‛ இந்திய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காங்கிரஸ் இவ்வளவு வெறுப்பது ஏன்? இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில், தமிழகத்தின் புனித சைவ மடத்தால், முன்னாள் பிரதமர் நேருவுக்கு ஒர புனிதமான செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால், அது ஒரு ‛வாக்கிங் ஸ்டிக்' என மாற்றப்பட்டு அருங்காட்சியகத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது.
இப்போது, மற்றொரு வெட்கக்கேடான அவமானத்தை காங்கிரஸ் செய்துள்ளது. திருவாடுதுறை ஆதீனம், ஒரு புனிதமான சைவ மடம். இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் செங்கோலின் முக்கியத்துவத்தை பற்றி கூறியது. ஆனால், ஆதீனத்தின் வரலாற்றை போலி என காங்கிரஸ் சொல்கிறது. தங்களின் நடத்தை குறித்து காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (46)
செங்கோல் ஏந்தும் நடைமுறையை முதலில் கொண்டுவந்தவர் தமிழன் தான் ஆட்சி பீடம் ஏறும் அரசனுக்கு செங்கோல் வழக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வந்து உள்ளது
அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறியது தமிழக மக்களுக்கு வருத்தம் தருகிறது.
இது போல் காங்கிரஸ் மறைத்த உண்மைகள் எவ்வளவு உள்ளதோ. பத்மா சுப்ரமணியம் எழுதியிருந்தால் காங்கிரஸ் இதை செய்திருக்கும். மேலும் இதுபோன்று பாஜக கண்டு பிடிப்பது தான் வேலை என்றால் தனியாக துறை உருவாக்க வேண்டும்.
நல்ல யோசனை
பிரதமரின் கையில் செங்கோல் தேசிய மாடல். முதல்வரின் கையில் கருங்காலி திராவிட மாடல்.