Load Image
Advertisement

முதல்வரானார் சித்தராமையா: சிறந்த நிர்வாகம் தருவாரா?

Will Chief Minister Siddaramaiah give better governance?    முதல்வரானார் சித்தராமையா: சிறந்த நிர்வாகம் தருவாரா?
ADVERTISEMENT
கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவியை பெறுவது தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களான சித்தராமையா மற்றும் சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும், கட்சி மேலிட சமாதானத்தின்படி, முதல்வராக சித்தராமையாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் மே 20 ல் பதவியேற்றனர்.

அதை தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளித்த முக்கிய வாக்குறுதிகளான, வீடுகளுக்கு மாதம், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து முக்கிய திட்டங்களுக்கு, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா, 2013 முதல், 2018 வரை ஐந்தாண்டு காலம், ஏற்கனவே முதல்வர் பதவி வகித்தவர் என்பதால், அவரை மீண்டும் தேர்வு செய்தது சரியானதே என்பது, அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு. அதேநேரத்தில், மாநிலத்தில் காங்., கட்சியை துடிப்புடன் வைத்திருக்க பாடுபட்டவர், மாநில காங்கிரஸ் தலைவரும், தற்போதைய துணை முதல்வருமான சிவகுமார்.

அதனால், முதல்வர் பதவியை தனக்கு தர வேண்டும் என்பதில், அவர் பிடிவாதமாக இருந்தார். இருப்பினும், தன் பிடிவாதத்தை தளர்த்தி, துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.

கர்நாடக தேர்தலில், ஆட்சியை தக்கவைக்க முடியாமல், பா.ஜ., தோல்வியை தழுவியிருந்தாலும், அந்தக் கட்சியின் ஓட்டு சதவீதம் குறையவில்லை. அத்துடன், பலமான எதிர்க்கட்சியாகவும் சட்டசபையில் அமர உள்ளது.

கடந்த, 2019ல் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்த பின், பா.ஜ., தலைமையிலான அரசு பதவியேற்றது. நான்கு ஆண்டுகள் அந்த ஆட்சியே நீடித்தது. இருப்பினும், இந்தத் தேர்தலில், பா.ஜ.,வின் தோல்விக்கு, முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளே காரணம் என, கூறப்படுகிறது.

உண்மையிலேயே இவை தான் காரணம் என்றால், அந்தக் கட்சியின் ஓட்டு சதவீதம் குறைந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கு மாறாக, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஓட்டு சதவீதமே குறைந்துள்ளது. ஆதலால், காங்., வெளியிட்ட இலவச வாக்குறுதிகளும், பொம்மை தலைமையிலான அரசுக்கு எதிரான அதிருப்தியுமே, பா.ஜ.,வின் தோல்விக்கு காரணம் என, உறுதியாக நம்பலாம்.

எனவே, சித்தராமையா அரசு, ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்துடன் கூடிய நல்லாட்சியை வழங்க வேண்டும். கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி, இம்முறை காங்., தனித்து ஆட்சி அமைத்துள்ளதால், எந்தவித நிர்பந்தங்களுக்கும் ஆட்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, சிறப்பான நிர்வாகத்தை தருவதில் பிரச்னை இருக்காது.

அதே நேரத்தில், முதல்வர் பதவி விவகாரத்தில், சித்தராமையா, சிவகுமார் இடையேயான பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டு இருந்தாலும், இது தொடராமல் இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதையும் மீறி பிரச்னைகள் உருவானால், அவற்றை உடனுக்குடன் காங்., மேலிடம் தீர்க்க வேண்டும்.

இல்லை எனில், விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான மோதலால், அம்மாநில காங்கிரசில் ஒரு நிச்சயமற்ற நிலைமை நீடிப்பது போன்ற சூழ்நிலை, கர்நாடகாவிலும் உருவாகி விடும். மேலும், இந்த ஆண்டில், சித்தராமையா அரசு செயல்படும் விதத்தை பொறுத்து தான், அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற முடியும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement