சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியாக, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. மொத்தம், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். இதன் வாயிலாக குடிநீர் வாரியத்திற்கு ஆண்டுக்கு, வரி மற்றும் கட்டணமாக, 892 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
ஆனால், மத்திய, மாநில அரசுகளின் சில துறைகள், பல ஆண்டுகளாக குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி செலுத்தவில்லை.
பலமுறை, துறை ரீதியாக கடிதம் அனுப்பியும், 126 கோடி ரூபாயை வசூலிக்க முடியாமல் வாரிய அதிகாரிகள் திணறுகின்றனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
வரியில் தான், குடிநீர், கழிவு நீர் சேவை, ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் பயனாக, பொதுமக்கள் வரி செலுத்துகின்றனர்.
ஆனால், மத்திய, மாநில அரசின் சில துறைகள், பல ஆண்டுகளாக, 126 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர். இதை எப்படி வசூலிப்பது என தெரியாமல் தவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கள் கூறினர்.
நிலுவை வைத்துள்ள மத்திய, மாநில அரசு துறைகளின் விபரம்:
துறைகள் நிலுவை தொகை (ரூ.கோடியில்
)உள்ளாட்சி அமைப்புகள் 31.84
காவல் துறை 18.81
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 16.09
வீட்டுவசதி வாரியம் 14.15
அரசு மருத்துவமனைகள் 8.89
பொதுப்பணித் துறை 4.74
கல்வித் துறை 1.95
போக்குவரத்துத் துறை 0.74
மின் வாரியம் 0.45
இதர மாநில அரசு அலுவலகங்கள் 12.38
மத்திய அரசுத்துறை அலுவலகங்கள் 16.67
மொத்தம் 126.71
துறைகள் சார்ந்த கோரிக்கைகளுக்கு, முதலில் ஒவ்வொரு துறை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடையே, டி.ஓ.எல்., என்ற நேர்முக வேண்டுகோள் கடிதம் அனுப்பப்படும்.இந்த கடிதம், துறைக்கு இக்கட்டான நிலை ஏற்படும்போது தான் பயன்படுத்தப்படும். இதேபோல, மின் வாரிய செயலர், இதர அரசு துறைகளுக்கு, டி.ஓ.எல்., கடிதம் எழுதியதால், பல ஆண்டுகள் நிலுவை தொகை வசூலானது. குடிநீர் வாரியத்தில், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், டி.ஓ.எல்., கடித நடைமுறையை பின்பற்ற, வாரிய உயர் அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.
- -நமது நிருபர்- -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!