ADVERTISEMENT
வடபழநி: வடபழநி ஆண்டவர் கோவிலில் அமைக்கப்பட்ட சூரிய மின் சக்தி நிலையத்தின் இயக்கத்தை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.
வடபழநி ஆண்டவர் கோவிலில், 'சிட்டி யூனியன்' வங்கி நிதி உதவியுடன், 25 லட்சம் ரூபாய் செலவில் 41 கிலோ வாட் திறன் கொண்ட, 75 சூரிய மின் சக்தி பேனல்கள் அமைக்கப்பட்டன.
இந்த சூரிய மின் சக்தி நிலையம் வாயிலாக, தினமும் 150 -- 160 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படலாம். இந்த சூரிய மின் சக்தி துவக்க விழாவில், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், எம்.எல்.ஏ.,க்கள் வேலு, கருணாநிதி, 'சிட்டி யூனியன்' வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன், துணை கமிஷனர் முல்லை ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:
வடபழநி கோவிலின் முழு மின் தேவையையும் நிறைவு செய்யும் வகையில், சூரிய மின் சக்தி மின் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலின் நடை அடைப்பின்போது சேமிக்கப்படும் மின்சாரம், மின் வாரியத்திற்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அனைத்து திருக்கோவில்களிலும் சூரிய மின் சக்தி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு நாட்களுக்கு முன், 48 திருக்கோவில்களுக்கு பிரசாதங்கள் அஞ்சல் வழியாக இந்தியா முழுதும் அனுப்பும் திட்டமும், 50 கோவில்களில் பாடல்கள், சொற்பொழிவுகள் இசைக்கும் திட்டமும் துவக்கப்பட்டது.
பழநி முருகன் கோவிலில், 60 வயதை கடந்தவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக புதிய ரோப் கார் லைன் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவது மகிழ்ச்சி. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!