Load Image
Advertisement

தமிழ் அமுதாவதும்,தெவிட்டாத தேனாவதும் ...

Latest Tamil News

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 36 ஆயிரம் மாணவர்களின் தோல்விக்கு காரணம் அவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறாததே என்ற புள்ளிவிவரம் கூறுகிறது.
தமிழ்நாட்டில், பிறந்தது முதல் வீட்டில்,பள்ளியில்,வெளியில் மாணவர்கள் பேசும் மொழி தமிழ் மொழியே

ஆங்கிலம்,பெளதிகம் என்று எந்த மொழி பாடம் படித்தாலும் அதை உள்வாங்கிக் கொள்ள உபயோகிப்பதும் தமிழ் மொழியே

சினிமா, நாடகம், சீரியல் என்று பொழுது போக்கு நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தேர்ந்தெடுப்பதும் தமிழ் மொழியே

சந்தோஷத்தின் போதும் சண்டையின் போதும் சமரசத்தின் போதும் சகஜமான உரையாடலின் போதும் உபயோகிப்பது தமிழ் மொழியே

இப்படி தமிழ் தமிழ் என்று தமிழ் மொழியையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் தமிழ்நாட்டு மாணவர்கள் 36 ஆயிரம் பேர் தமிழில் பெயிலாகி உள்ளனர் என்பது வியப்பிர்க்குரியது அல்ல வேதனைக்குரியதாகும்
Latest Tamil News
இந்த வேதனையை நீதிபதி ஆர்.சுரேஷ் குமார்,கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடந்த கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 51 வது ஆண்டு விழாவில் கொட்டித்தீர்த்தார்.

தமிழ்நாட்டில் தமிழில் மாணவர்கள் பெயிலாகிறார்கள் என்றால் இதற்கான காரணமாக ஒவ்வொருவரும் ஒருவரை சுட்டிக்காண்பித்து தப்பிக்கப்பார்ப்பர், ஆனால் என்னைப் பொறுத்தவரை இதற்கான முழு முதற்காரணமாக ஆசிரியர்களையே சொல்வேன்.

மற்றவர்களுக்கு பல வேலை ஆனால் ஆசிரியப்பெருமக்களுக்கு மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தருவது ஒன்றே வேலை,அரசால் ஆண்டு தோறும் போடப்படும் 33 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கான பட்ஜெட்டில் 31 ஆயிரம் கோடி ரூபாயை சம்பளமாகப்பெறும் ஆசிரியர்கள், நடைபெற்ற இந்த அவலத்திற்கு பொறுப்பேற்க வேண்டாமா?வாங்கும் சம்பளத்திற்கு நியாயம் கற்பிக்க வேண்டாமா?

வாசிப்பு என்பதைமே மறந்து போன இன்றைய மாணவ சமுதாயம் கொஞ்சமாவது தமிழ் மொழியை எழுதுகிறார்கள் படிக்கிறார்கள் என்றால் அதற்கு தமிழ் மொழி பாடப்பிரிவு இருப்பது ஒன்றே காரணம்,தமிழ் மொழியால் தோற்றுப் போன இந்த 36 ஆயிரம் மாணவர் பட்டியலைப் பார்த்து பயந்துபோகும் மாணவர்கள் இனி எப்படி தமிழ் மொழி பாடப்பிரிவின் பக்கம் தலைவைத்துபடுப்பர்.

ஏற்கனவே தமிழை பேசவும்,வாசிக்கவும்,அதில் யோசிக்கவும் தயங்கும் மாணவ சமுதாயம்தான் நாளைய இளைஞர் சமுதாயம், இவர்கள் தமிழை புறக்கணித்தால் தமிழ் எப்படி வளரும்,வாழும். பிற்காலத்தில் தமிழ் எங்கே? எப்படி? யாரிடம் இருக்கப்போகிறது? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.தமிழில் கதையும்,கவிதையும்,கட்டுரையும் இனி யாருக்காக எழுதுவது

எனக்கு அலுவல் மொழி ஆங்கிலமாகிவிட்டது ஆனால் அலுவலகம் தாண்டி பொதுவெளியில் வந்துவிட்டால், அதுவும் இது போன்ற பொது மேடையில் ஏறிவிட்டால், துளியும் ஆங்கிலம் கலக்காது தமிழில் மட்டுமே பேசுவேன், இது என் தாய்த்தமிழுக்கு நான் செய்யும் மரியாதை செலுத்தும் காணிக்கை.

ஆனால் தமிழில் வித்தகர்கள் என்று இன்று மேடையில் பேசுபவர்கள் பலர் தமிழைக் கொஞ்சமாய் தொட்டுக்கொண்டு ஆங்கிலத்தில்தானே பேசுகின்றனர், இவர்கள் தருவதைத்தானே இந்த சமுதாயம் பெறும்.

இப்போதும் கெட்டுப் போகவில்லை தமிழக அரசு தமிழ்நாட்டை நான்கு மண்டலமாக பிரித்து அந்த நான்கு மண்டலங்களிலும் தமிழை மட்டுமே கற்றுத்தரும் கல்லுாரிகளை தொடங்க வேண்டும், அந்த கல்லுாரிகளில் தரமான தமிழை கற்றுத்தரவேண்டும் ஆசிரியர்களும் இந்த கல்லுாரியில் மாணவர்களாக வேண்டும்.

தமிழை பெயரளவிற்கு பயன்படுத்துவதை விட்டு அதற்கு நிறைய நிறைய முக்கியத்துவம் தரவேண்டும், அதற்கு குடும்பமும் துணை நிற்கவேண்டும். இனி ஒரு மாணவன் தமிழில் பெயிலானால் அது தனக்கு நேரும் பெரும் இழுக்கு என கற்றுத்தரும் ஆசிரியர்கள் சபதமேற்கவேண்டும், இதெல்லாம் நடந்தால் நாளைய தலைமுறைக்கு தமிழ் அமுதாகும், தெவிட்டாத தேனாகும்.

-எல்.முருகராஜ்



வாசகர் கருத்து (6)

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    அதுசரி. அரசு சம்பளம் பெறுபவர்கள், அரசியல் அல்லக்கைகள் மட்டும் தங்கள் வாரிசுகளை, தமிழ் வழி கல்வி அல்லது அரசு பள்ளிகளில் படிக்கவைப்பதில்லையே? அது ஏன் என்று நீங்கள் கேட்டதுண்டா ?? இதில் அரசு ஆசிரியர் தான் பெருமளவு அடக்கம். உண்மையா இல்லையா ? எங்கே வெள்ளை அறிக்கை ? இவர்களே இந்த பாடத்திட்டத்தை விரும்பாதபோது, அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தையும், கல்வி நிறுவனங்களையும், மத்திய அரசிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு ??

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    தாய் மொழியில் ஆர்வம் காட்ட வேண்டும் .

  • S.Ganesan - Hosur,இந்தியா

    உண்மையான கருத்து.

  • Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்

    உண்மையான கருத்து. தமிழில் 36 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறாதது மிக்க வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களும் & பெற்றோர்களும் முழுக்காரணம். அரசு, பள்ளி கல்வித்துறை இதை மிக கவனமாக மேற்பார்வையிட்டு, அடுத்த ஆண்டு இதே தவறு நேராதவாறு ஆவண செய்யவேண்டும்

  • DOSS - புதுச்செரி,இந்தியா

    பிரச்சினைகள் மொழிகளில் இல்லை. மாணவர்கள் வளர்ப்பில்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement