Load Image
Advertisement

எப்படி இருந்தது பண்டைய தமிழகம்?

How was ancient Tamil Nadu?    எப்படி இருந்தது  பண்டைய தமிழகம்?
ADVERTISEMENT
சோழர்களின் வரலாற்றைப் புரிந்துகொள்ள, பண்டைய தமிழ்நாட்டின் நிலவியலைப் புரிந்துகொள்வது முக்கியம். இன்றைய தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மாநிலங்களின் கடந்த கால ஆட்சியாளர்களில் சிலரையேனும் அறிந்திருப்பதும் முக்கியம். சில அடிப்படைகளை அறிந்துகொள்ளுங்கள்!


தமிழ்நாடு அன்றைக்கு எப்படி இருந்தது?






தமிழ்நாடு இன்றுள்ள வரைபடத்தில் இருப்பதுபோல அன்றைக்கு ஒரே அரசியல் அலகாக இல்லை. பண்டைய தமிழ்நாடு என்பது மேலே திருப்பதி முதலாகக் கீழே குமரி வரை இருபுறமும் கடல் சூழ தமிழ் பேசும் மக்களைக் கொண்டிருந்தது; நாம் 2,500 ஆண்டுகள் வரலாற்றை எடுத்துக்கொண்டால், இதில் சரிபாதி காலம் வரை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இன்றைய கேரளமும் இருந்தது.
ஏனென்றால், பொது ஆண்டு கி.பி., 800 வரை மலையாளம் ஒரு தனி மொழியாக உருவெடுக்கவில்லை. அது தமிழின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆகையால், பண்டைத் தமிழகத்தின் நிலமானது இன்றைக் காட்டிலும் பெரியது. ஆனால், இந்த நிலப்பகுதி பல அரசர்களால் ஆளப்பட்டது.

சேர, சோழ, பாண்டியர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியை எப்போது ஆண்டனர்?



பண்டைத் தமிழகத்தின் ஏராளமான அரச குடியினரில், சேர, சோழ, பாண்டியர்கள் பெரும் நிலப் பகுதிகளை ஆண்டவர்கள். அதாவது, பல துண்டுப் பரப்புகளாக இருந்த தமிழ் நிலத்தில் பெரும் பரப்பு களை ஆண்டவர்கள் இவர்கள் என்று சொல்லலாம்.
சேரர்கள் இன்றைய கேரளத்தின் கணிசமான பகுதியை உள்ளடக்கி, அங்கே முசிறியிலிருந்து இங்கே கரூர் வரை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தனர். பிற்பாடு கேரளம் தனி பிராந்தியமாக உருவெடுத்ததும், தமிழ் நிலத்தைப் பொறுத்த அளவில் கொங்கு பிராந்தியம் மட்டுமே சேரர்களின் நிலமாக இருந்தது.
சோழர்கள் திருச்சி உறையூரி லிருந்து நாகப்பட்டினம் வரையிலான பிராந்தியத்தில் கணிசமான பகுதியை ஆண்டனர். பாண்டியர்கள் மதுரையில் இருந்து குமரி வரையிலான பிராந்தியத்தில் கணிசமான பகுதியை ஆண்டனர்.

அப்படியென்றால், சேர, சோழ பாண்டியர்கள் என்ன சிற்றரசர்களா?



இல்லை. மேலே சொன்னது அவர் களுடைய பாரம்பரியப் பகுதி. இதைத் தாண்டியும் அவர்கள் ஆண்டிருக்கின்றனர். பொதுவாக, தமிழ் மன்னர்கள் ஒருவர் மீது படையெடுத்து வென்றாலும், பொருள்களைச் சூறையாடி வருவது, எதிரியைத் தனக்குக் கப்பம் கட்ட வைப்பது என்பதான அணுகுமுறையையே கையாண்டிருக்கின்றனர். தங்கள் ராஜ் யத்துக்கு அருகில் உள்ள பகுதியை வேண்டுமானால் தேவை கருதி வளைத்துக் கொள்வர்.
முற்றுமுதலாக முழுத் தமிழ்நாட்டையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வருவது என்பதை முதன் முதலில் சோழர்கள் தான் செய்தனர். ராஜராஜன் காலத்தில் இது நடந்தது. ஒரு நுாற்றாண்டுக்கும் மேல் அவர்களுடைய முழு ஆட்சியின் கீழ் தமிழ்நாடு இருந்தது. பிற்பாடு பாண்டியர்களும் அப்படிச் செய்தனர். சேரர்கள் தொடர்பில் மிகக் குறைந்த விபரங்களே கிடைக்கின்றன.
சரி, சேர, சோழ பாண்டியர்களின் பாரம்பரிய பிராந்தியங்கள் நீங்கலாக ஏனைய பகுதிகளை யார் ஆண்டனர்?
நுாற்றுக்கும் மேற்பட்ட அரசர்கள் ஆண்டனர். இவர்களில் புகழ் மிக்க பல குடிகள் உண்டு. இன்றைய தருமபுரி பகுதியை ஆண்ட அதியமான்கள் அப்படிப் பட்டவர்களுக்கு ஓர் உதாரணம்.
இன்னும் கொஞ்சம் எளிமையாக

விளக்க முடியுமா?



ஒரு புரிதலுக்காக நாம் தமிழ்நாட்டின் பகுதிகளை ஏழு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம்: சேரர்களின் ஆளு கைக்கு உட்பட்ட சேர நாடு மற்றும் கொங்கு நாடு; சோழ நாடு; பாண்டிய நாடு; மலையமான்களின் நடுவில் நாடு, பிற்காலத்தில் பல்லவர்கள் நிலமான தொண்டை நாடு, இன்றைய ஆந்திரம், கர்நாடகத்தின் அன்றைய ஆட்சியாளர்களின் செல்வாக்கில் ஆட்பட்டிருந்த கங்க நாடு.


சேர, சோழ, பாண்டிய நாடுகள் புரிகின்றன. கொங்கு நாடும், நடுவில் நாடும் கூடப் புரிகின்றன. அதென்ன கங்க நாடு?

அதாவது, தமிழ்நாட்டின் மேற்பகுதி எல்லையை ஒட்டிய சென்னை - திருத்தணி - ஓசூர் - மேட்டூர் - சத்தியமங்கலம் - - வேலுார்... அந்த ஓட்டம்! இது ஆந்திர, கர்நாடக எல்லைகளை ஒட்டி இருப்பதால், அங்கு ஆட்சி செய்தவர்களுடைய ஆதிக்கம் இந்த ஓட்டத்தை அவ்வப்போது பாதிக்கும். கங்கர்கள் என்பவர்கள் இன்றைய கர்நாடகம் - ஆந்திரத்தை ஆண்ட ஓர் அரச வம்சத்தினர்.
இவர்களுடைய ஆட்சிப் பிரதேசம் 'கங்க நாடு' என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு பல அரச வம்சத்தினர் அங்கே மாறினாலும், கங்கர்கள் ஆண்ட பிராந்தியத்தை ஒட்டி யுள்ள ஓட்டத்தை - அது தமிழகத்தின் பகுதியாக இருந்தாலும், - 'கங்க நாடு' என்றே நம் வரலாற்றாய்வாளர்கள் சுட்டுகின்றனர்.
சரி, இவ்வளவு பேர் ஆண்டிருக்கும்போது மூவேந்தர்களுக்கு அடுத்து ஏன் களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், பிரிட்டிஷார் இவர்களைப் பற்றியே அதிகம் நாம் பேசுகிறோம்?
மூவேந்தர்கள் தமிழர்கள். தமிழ் நிலத்தை அடித்தளமாகக் கொண்டு ஆண்டவர்கள். நாம் கடந்த 2,500 ஆண்டு வரலாற்றை எடுத்துக்கொண்டால், மூவேந்தர்களும் தமிழகத்தின் ஏதோ ஒரு நிலப் பகுதியைக் குறைந்தது 1,000 ஆண்டுகளேனும் ஆண்டிருக்கின்றனர் என்பது தெரிகிறது. ஏனைய தமிழ் அரசர்களுடைய ஆட்சிக் காலகட்டமும் குறைவு; அதேபோல், அவர்களுடைய ஆட்சிப் பரப்பும் மிகக் குறைவு.
மூவேந்தர்களுக்கு அடுத்ததாக எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் பங்களித்திருப்பவர்கள் களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், பிரிட்டிஷார் என்றே சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் கணிசமான பகுதியை இவர்கள் நால்வரும் ஆண்ட காலகட்டம் என்று கணக்கில் கொண்டால் அதுவே குறைந்தது 1,300 ஆண்டுகளுக்கு மேல் வரும். வெளியிலிருந்து வந்தவர்கள் என்றாலும், நிறைய பங்களித்திருக்கின்றனர்; சூறையாடிக்கொண்டு ஓடிப்போனவர்கள் இல்லை.
குறிப்பாக, கர்நாடகப் பின்னணி யைக் கொண்ட களப்பிரர்கள், ஆந்திரப் பின்னணியைக் கொண்ட பல்லவர்கள், நாயக்கர்கள் காலகட்டங்களில் அங்கிருந்து இங்கு கணிசமான மக்கள் வந்திருப்பது தெரியவருகிறது. இந்த மண்ணோடும், மக்களோடும் அவர்கள் கலந்தனர். தமிழ் நிலத்தின் மக்கள்தொகையும் பலமும் அதிகரித்தன; அதன் பண்பாடு மேலும் செழுமை அடைந்தது.
தமிழகத்தில் முன்பு பல நாடுகள் இருந்திருப்பது தெரியவருகிறது. அப்படியென்றால், தமிழ்நாடு ராஜராஜன் காலத்தில் தான் தோன்றியதா?
முழு நிலத்தையும் முதலில் ஆண்டவர் ராஜராஜன் என்றாலும், அதற்கு முன் இந்நிலம் பல துண்டுகளாகப் பலரால் ஆட்சி செய்யப்பட்டாலும், 'வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்நாடு' எனும் உணர்வு மட்டும் தொன்று தொட்டு நம் மக்களிடம் இருந்தது.
நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் - அவை எந்தப் பகுதியிலிருந்து எழுதப்பட்டிருந்தாலும் - தமிழ்நாடு எனும் உணர்வை எப்போதும் பிரதிபலித்தன. உணர்வால் இந்த மண்ணையும், நம் மக்களையும் தமிழ் எனும் உயிர் மொழி எப்போதும் பிணைத்திருக்கிறது!
- 'சோழர்கள் இன்று' நூலில், கேள்வி -- பதில் வடிவில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரை. - சு.ராஜகோபாலன் -பத்திரிகையாளர்



வாசகர் கருத்து (4)

  • Arul Siva Murugan Velayutham - Bangalore,இந்தியா

    அது எல்லாம் சரி ஆனால், அரபிக்கடல் வங்கக்கடல் என்ற பெயரில் அக்காலத்தில் இல்லை.. வங்க மொழியே 1000 ஆண்டுகள் மட்டுமே பழையது. இவை மேல்கடல் கீழ்கடல் என்றே அழைக்கப்பட்டிருக்கக்கூடும்.

  • magan - london,யுனைடெட் கிங்டம்

    The great chera chola pandiya imagine who's ruling us now I never seen any remembrance in marina Beach shame for us

  • GANESAN S R - chennai,இந்தியா

    மேலே உள்ள ராஜா அவர்களின் சின்னபுத்தி இங்கே வெளிப்படுகிறது. குதர்க்கவாதிகள்

  • raja - Cotonou,பெனின்

    இது திருட்டு திராவிடத்தை தூக்கி பிடிக்கும் புணைய பட்ட வரலாறு....நம்பாதே தமிழா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement