சத்தீஸ்கரில் மதுபான விற்பனையில் ரூ.2,000 கோடி மோசடி : ஒவ்வொரு பாட்டிலிலும் ஊழல்
சத்தீஸ்கரில், மது விற்பனைக்கு லஞ்சம், சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதற்கு கமிஷன் என நடந்த மிகப் பெரும் மோசடி தொடர்பான வழக்கில், மதுபான தொழிலதிபர் அன்வர் தேபார், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மது பாட்டிலிலும் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.ராய்ப்பூர்-சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில், 'டாஸ்மாக்' போலவே, இங்கு, சத்தீஸ்கர் மாநில வாணிபக் கழகம் வாயிலாகவே, மதுபான கொள்முதல், விற்பனை நடக்கிறது. இதன் கட்டுப்பாட்டில், ௮௦௦ கடைகள் உள்ளன.
தமிழகத்தைப் போலவே, சத்தீஸ்கர் அரசுக்கும் மதுக் கடைகள் வாயிலாகவே அதிக வருவாய் கிடைத்து வருகிறது.
குற்றச்சாட்டு
இங்கு மதுபான விற்பனையில் பெரும் மோசடி நடந்துள்ளதாக, வருமான வரித் துறை, ௨௦௨௨ல் வழக்குப் பதிவு செய்தது.
அதனடிப்படையில் இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலராக உள்ள மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனில் துதேஜா உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுபான தொழிலதிபர் அன்வர் தேபார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
ராய்ப்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையின்போது, அமலாக்கத் துறை சார்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த, 2019 முதல் மதுபான விற்பனையில் மோசடி நடந்துள்ளது. மதுபானங்களை விற்பதற்காக, குறிப்பிட்ட அளவுக்கு கமிஷன் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
கூடுதல் விலை
இதைத் தவிர கணக்கில் காட்டாமல் மதுபானங்கள் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மது பாட்டிலிலும் ஊழல் நடந்துள்ளது.
மொத்த மதுபான விற்பனையில், 40 சதவீதம் வரை, கணக்கில் காட்டாத மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. அதாவது, மதுபான தொழிற்சாலைகளில் இருந்து, அரசு குடோனுக்கு செல்லாமல், நேரடியாக கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்படும். இதற்கு வருமான வரி, கலால் வரி போன்றவை செலுத்த வேண்டியதில்லை.
இதன் வாயிலாக அரசு கஜானாவுக்கு ஒரு காசு கூட போகாது. மதுபான தொழிற்சாலைகளுக்கு உரிய பணம் கிடைத்துவிடும். கூடுதல் விலை, வரி ஏய்ப்பில் கிடைக்கும் பணம், மோசடி கும்பலுக்கு சென்று விடும்.
இந்த வகையில், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனில் துதேஜா. மதுபான தொழிலதிபர் அன்வர் தேபார் இந்த மோசடி திட்டத்தை செயல்படுத்துவதுடன், கமிஷன் மற்றும் மோசடி பணங்களை வசூலித்து வந்தார்.
இவர் காங்கிரசைச் சேர்ந்த ராய்பூர் மேயர் அய்ஜாஸ் தேபாரின் சகோதரர்.
இந்த மோசடியில் கிடைத்துள்ள பணத்தை, அன்வர் தேபார், அனில் துதேஜா இருவரும் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் பிரித்து கொடுத்துள்ளனர்.
இந்த பணம் தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட்டுஉள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அமலாக்கத் துறை கூறியுள்ளது.
வாசகர் கருத்து (11)
மது விற்பனை தவறு. யார் செய்தாலும் தவறுதான். ஆனால் இங்கே சிலர் திமுகவை மட்டுமே குறைகூறுவது மதுவுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல, அது பித்தலாட்டம். திமுகதான் மது அலைகளை நடத்துகிறதென்றால், அந்த ஆலைகளிலிருந்து அதிமுக ஆட்சியில் மது வாங்கப்படவில்லையா? அப்போது ஊழல் நடைபெறவில்லையா? அவர்களோடு கூட்டணி வைத்தவர்களுக்கு இதில் பங்கில்லையா? எல்லோரும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள். மது வருமானம் என்பதே பொய்யானது. அரசாங்கத்திற்கு வரும் வருவாயை காட்டிலும் கம்பெனிகளுக்கே அதிக வருவாய். அதை மறைக்கின்றனர்.,
இங்கு மதுபான ஊழலை போல மாநில நெடுஞ்சாலை ரோடு காண்ட்ராக்ட், பாதாள சாக்கடை காண்ட்ராக்ட்...மழைநீர், கழிவுநீர் காண்ட்ராக்ட், ஸ்மார்ட் சிட்டி காண்ட்ராக்ட் இவற்றை முழுவதுமாக அலசி ஆராய்ந்தால் நிறைய ஊழல் வெளிவரும். மாநில அரசு சம்பந்தப்பட்டதால் அடுத்த ஆட்சியில் தான் தெரியும். ஏதோ ஒரு திராவிட அரசே அமைந்தால் எதுவும் வெளிவராது.
நமதே நம்மூர்ல சரக்கே டூப்ளிகேட். விசாரணை செய்தால் தமிழகத்தில் 2ஜி-யை விட வாய் பிளக்கும் தொகையாக இருக்கும். ஏனெனில், மது ஆலைகளும் நமதே ஆட்சியும் நமதே.
சத்தீஸ்கர் போலவே இங்கும் விசாரணைகளும், கைதுகளும் நடக்குமா? ஏனெனில் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாயில் ஐம்பது சதவீதம்தான் கஜானாவிற்கு வருகிறதென நம்முடைய நிதியமைச்சரே ஆடியோ அல்ல...வீடியோ பேட்டியே தந்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2024 க்கு அப்பறந்தானே திராவிட மாடலை இந்தியா முழுவதும் கொண்டு போக தளபதி திட்டமிட்டிருந்தார் ? சத்தீஸ்கர் 2019 லேயம், டெல்லி 2022 லேயும் திராவிட மாடலை அமுல்படுத்திட்டாங்க போலிருக்கு ?