தமிழக அரசின் 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மாதம் 20ம் தேதி, நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தி.மு.க., அரசு பதவியேற்றபோது, நிதி நெருக்கடியை சந்தித்தது. இதற்கு முக்கியக் காரணம், முந்தைய ஆண்டுகளில், தமிழகத்தின் வரி வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே.
கடந்த 2006 முதல் 2011 வரையிலான ஆண்டுகளில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மாநிலத்தின் சொந்த வரி வருமானம், எட்டு சதவீதமாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020 - 21ம் ஆண்டு, 5.58 சதவீதமாக குறைந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு எடுத்த முயற்சிகளின் காரணமாக, இந்த விகிதம் 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை மேலும் உயர்த்தி, நலத் திட்டங்களுக்கான வருவாய் ஆதாரங்களை ஈட்ட, முனைப்போடு செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அதன்படி, நிதி நிலையை சீர் செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, உலகப் புகழ் பெற்ற நிபுணர்களைக் கொண்ட, பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'நபார்டு' வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க, விரைவுப்படுத்த, நிதியை ஒழுங்குபடுத்த, நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தை, நிதித் துறை நியமித்துள்ளது.
அதேபோல், பல்வேறு மத்திய அரசு திட்டங்கள், மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய திட்டங்கள் போன்றவற்றை கண்காணிக்க, ஆலோசனை வழங்க, இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, லண்டனில் செயல்படும், பிரபல 'கன்சல்டன்சி' நிறுவனமான 'எர்னஸ்ட் அண்டு யங்' என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவன வல்லுனர்கள் குழு, தமிழகத்தில் உள்ள, 50 அரசு பொதுத் துறை நிறுவனங்களை ஆய்வு செய்ய உள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் ஆகியவற்றையும், நிறுவனத்தின் செயல் திறனையும் ஆய்வு செய்ய உள்ளது. ஆய்வு அறிக்கையுடன், நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளது.
நிதி அமைச்சகத்தின், பொது நிறுவனங்களின் பணியகம் பிரிவுடன் இணைந்து, இக்குழுவினர் செயல்பட உள்ளனர்.
முதல் கட்டமாக, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், சிறு தொழில் வளர்ச்சிக் கழகம், மாநில தொழில்கள் மேம்பாடு, தொழில் வளர்ச்சிக் கழகம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், சென்னை குடிநீர் வழங்கல் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளன.
தமிழக அரசின் வருவாயை பெருக்கவும், வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறையை குறைக்கவும், அரசு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அரசு நியமித்துள்ள ஆலோசனை நிறுவனங்கள், பல்வேறு வகையில் உதவ உள்ளன.
இது தவிர, நிர்வாக ரீதியாகவும் பல சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு, சட்டசபையில் நாளை நடக்கும் நிதித் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் தியாகராஜன் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையில் நேற்று, அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது:
துறையில் பல சீர்திருத்தங்களை செய்துள்ள போதிலும், இன்னும் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. நாளை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பல அறிவிப்புகள் வரும். மக்கள், அரசு அலுவலகங்களுக்கு வராமல் சேவைகளைப் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கடனிலும், நிதி பற்றாக்குறையிலும் அரசு செயல்படுகிறது. கையில் உள்ள நிதியில், நீர் நிலைகளை துார் வாருதல், சாலைகள், பாலங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசுக்கு செலுத்த வேண்டிய நிதியை, மிக எளிமையாக 'ஆன்லைனில்' செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (71)
எல்லாம் வெத்து அறிவிப்போடு முடிந்து விடுகிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அறிவித்த எதுவும் உருப்படியாக நிறைவேற்றப் பட வில்லை
அப்ப, அந்த அமெரிக்க 5+1 குரூப் இத்தன நாளா தண்டத்துக்கு சம்பளம் வாங்கிட்டிருந்தாங்களா? இன்னும் தொடருமா?
பணவீக்கம், வட்டி விகித உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்கின்றன....... ஆனால் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு பூஜ்ஜியம் என சர்வதேச வணிக இதழான ப்ளூம்பெர்க் கணித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு பக்கம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்தது. மற்றொரு பக்கம் கோவிட்டின் தொடர்ச்சியான விளைவுகள், குறிப்பாக சீனாவில் ஊரடங்கு போடப்பட்டது மற்றும் இதனால் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு, அதனைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை மத்திய வங்கிகள் உயர்த்தியது போன்ற தொடர் விளைவுகளால் உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளன. ... இந்நிலையில் ப்ளூம்பெர்க் 2023ல் பொருளாதார மந்தநிலையை சந்திக்க வாய்ப்புக் குறைந்த டாப் 5 நாடுகள், வாய்ப்பு நிறைந்த டாப் 5 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. அதில் இந்தியா மந்தநிலைக்கான பூஜ்ஜிய வாய்ப்புடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஐ.எம்.எப்., எனும் சர்வதேச நாணய நிதியமும் 2023ல் வேகமாக வளரும் பொருளதாரம் என இந்தியாவைக் குறிப்பிட்டுள்ளது.... மந்தநிலையை சந்திக்க வாய்ப்புள்ள நாடுகள் இப்பட்டியலில் முதல் இடத்தில் பிரிட்டன் உள்ளது. ஏற்கனவே இங்கு நிதி நிர்வாகத்தை சமாளிக்க முடியாமல் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் ஆகிய பிரதமர்கள் பதவி விலகியுள்ளனர். தற்போது இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பிரதமராக உள்ளார். 2023ல் பிரிட்டனில் மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 75% என்கின்றனர். ...
Beter to constitue a comittee og finance wizards like Gnanadesikan, IAS & T. V. Somanathan, IAS, Shanmugam, IAS, EX chief secretary, C&AG, Chennai who know our state finances and procedures very well than the ed foreign audit firm.
எந்த குழு வந்தாலும் பொருளாதாரத்தின் அடிப்படை பின்பற்ற படவில்லை (அதாவது விரலுக்கு தகுந்த வீக்கம் ) என்றால் வேலைக்காகாது . ஓட்டுக்காக இலவசம் ... அதற்கு அதிக கடன் ... அதற்கு வட்டி என்கிற நெருக்கடியில் எதுவும் உருப்படாது. முதலில் அரசு ஊழியர் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவீனங்கள் அரசு பட்ஜெட்டில் அதிகபட்சமாக முப்பது சதவீதத்துக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது கட்டாயம் . இதெல்லாம் நடக்காமல் பொருளாதார முன்னேற்றம் காண முடியாது