சென்னை:: வழக்கறிஞர்களை தேர்வு செய்வதற்கான தற்போதைய நடைமுறையை மறுஆய்வு செய்து, புதிய நடைமுறையை வகுக்கும்படி, அனைத்து வங்கிகளுக்கும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட நடைமுறையை பின்பற்றி, வங்கிகளுக்கான வழக்கறிஞர்களை தேர்வு செய்யவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் மாரிமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
தேசிய வங்கிகள், பொதுத்துறை வங்கிகளில், வழக்கறிஞர்கள் பட்டியலை தேர்வு செய்வது, அரசியலமைப்பு சட்டத்தின்படியா என்பதை பரிசீலிக்க வேண்டியதுள்ளது. தற்போது பின்பற்றப்படும் நடைமுறையை பார்த்தால், தகுதியானவர்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுவது தெரிகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவப்படி இல்லை. அதிகாரிகள் விருப்பப்படி தேர்வு செய்கின்றனர்.
அரசியலமைப்பு சட்டப்படி, பொது வேலைவாய்ப்பில், சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். வங்கிகளுக்கான வழக்கறிஞர்கள் பட்டியல் தேர்வை, வங்கி பணி நியமனமாக கருத முடியாது. குறிப்பிட்ட காலத்துக்கு என ஒப்பந்த அடிப்படையில், வழக்கறிஞர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தேசிய வங்கிகளும், பொதுத்துறை வங்கிகளும், அரசு என்ற பொருளில் வருவதால், அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள, சம வாய்ப்பு என்ற கொள்கையை பின்பற்றும் பொறுப்பில் இருந்து நழுவ முடியாது.
தேசிய வங்கிகள் மற்றும் பொதுத் துறை வங்கிகளில், ஏராளமான வழக்குகள் கையாளப்படுவதால், தகுதியான வழக்கறிஞர்களை தேர்வு செய்ய வேண்டும்; ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் உரிய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். தகுதியான வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்று, பொது அறிவிப்பு வெளியிடும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். தகுதியான அனைவருக்கும், சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எனவே, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள், வழக்கறிஞர்கள் தேர்வில் தற்போது பின்பற்றும் நடைமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும்; புதிய நடைமுறையை வகுக்கும் பணியை, நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (3)
பல மாநிலங்களில் தலைமையிடம் கொண்ட வங்கிகளுக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவு போடுவது சரியா? நீதிபதி நியமனத்தில் உரிய சமூக பிரதிநிதிதுவம் உண்டா? இன்று மக்கள் தொகை 4 மடங்கு அதிகம். வறுமை இருக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் குடும்ப கட்டுப்பாடு ஏன் விரும்புவது இல்லை. இட ஒதுக்கீடு எப்போதும் முடிவிற்கு வராது. வங்கி போன்ற commercial நிறுவனங்கள் இட ஒதுக்கீடு மூலம் மூடும் நிலை ஏற்படும். பொருளாதாரம் சிதையும். பணம் போட்டவர்கள் முடிவு செய்ய வேண்டியது. இங்கு தகுதி, ஒழுக்கம் பெற்றோர் முதல் மிக முக்கியம்.
படிக்கத்தான் இட ஒதுக்கீடே தவிர வேலைக்கும் இட ஒதுக்கீடு என்றால் அதைப்போல அபத்தம் வேறு ஒன்றும் இல்லை. என்றுதான் இவர்களை தகுதிக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.
பல நூறு கோடி கடன் பாக்கி வழக்குகளில் வாதாட திறமை தவிர வேறெதுவும் பின்பற்றப்பட்டால் இழப்பு அரசுக்குதான்😇.அது டெபாஸிட் போட்ட பாமரர்களை அச்சத்தில் ஆழ்த்தும்.