ராமநாதபுரம்-- ராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் அதற்கான அரசாணை வந்துள்ளது. இந்நிலையில் தற்போது விரைவில் ராமநாதபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தபடும், என சட்டசபையில் அறிவித்துள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரம் அதற்குரிய பூர்வாங்க பணிகளை முன்கூட்டியே துவங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் நகராட்சியை தேர்வு நிலையாக அறிவித்த பிறகே சிறப்பு நிலை அந்தஸ்து வழங்க வேண்டும். ஆனால், 2017ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி ராமநாதபுரம்நகராட்சியை ஒட்டி அமைந்துள்ள பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரகோட்டை, சூரன்கோட்டை ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும், என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவித்தார்.
இதையடுத்து அவசர அவசரமாக சிறப்பு நிலை அந்தஸ்து ராமநாதபுரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு கூடுதல் ஊழியர்களோ, சிறப்பு நிதியோ, நகர் எல்லை விரிவாக்க நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை. மாறாக பழைய 33 வார்டுகள் தான் இன்னும் உள்ளன.
கடந்த மாதம் ராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சிக்கான அரசாணை வந்துள்ளது. இந்நிலையில், சட்டசபை கூட்ட தொடரில் ராமநாதபுரம் நகராட்சியை விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்த உள்ளதாக அமைச்சர் நேரு அறிவித்துஉள்ளார்.
ஊராட்சிகளை இணைத்து 60 வார்டுகளாக்க திட்டம்
ராமநாதபுரம் நகராட்சியை சுற்றியுள்ள பட்டணம் காத்தான், சக்கரகோட்டை, சூரன்கோட்டை, பேராவூர், ஆர்.எஸ்.,மடை, அச்சுந்தன்வயல், புத்தேந்தேல் ஆகிய ஊராட்சிகளை இணைத்து 10 கி.மீ., சுற்றளவில் மாநகராட்சியாக்கவும், 60 வார்டுகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
கமிஷனர் நியமனம் அவசியம்
கடந்த 9 மாதங்களாக இங்கு கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. பொறுப்பு அதிகாரிகளால் முழுமையாக செயல்பட முடியவில்லை. குறிப்பாக வரி வசூல் பணி, பாதாள சாக்கடை சீரமைப்பு பணி, குடிநீர் குழாய் சேதம், ஊருணி துார்வாருதல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி, ரூ.8 கோடியில் பாதாள சாக்கடை குழாய் மாற்றும் பணி, கூடுதல் பணியாளர் நியமனம் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க கமிஷனர் உள்ளிட்ட பணியாளர்களை உடனடியாக நியமிப்பது அவசியம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!