பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தி வீடியோ பேட்டி:
ஏற்கனவே அமர்வு நீதிமன்றம், 'நிலுவையில் உள்ள சிவில் மெயின் வழக்கு தான், அ.தி.மு.க.,ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து முடிவு செய்யும்' என்றுசொல்லி இருக்கிறது. இப்படிப்பட்ட குளறுபடிகள்அனைத்தையும், எங்கள் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டில் எடுத்து வைப்பர். பன்னீர்செல்வத்துக்கு நீதி கிடைக்கும்.
பன்னீர்செல்வம் அணி ஜெயிக்குதோ, இல்லையோ... அவரது சார்பில் ஆஜராகும் வக்கீல்கள், 'வளமாகிடுவாங்க' பாருங்க!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை:
என் நண்பருக்கு இரண்டு நாள் பல்வலி. அம்பாசமுத்திரம் முன்னாள் ஏ.எஸ்.பி., பல்வீர் சிங்கை பார்க்க சொல்லி இருக்கிறேன். கன்னத்தில் அறை வேண்டுமா, அமைச்சர் நேருவையும், கல் எறியும் போது காயமடையாமல் தப்பிக்க, அமைச்சர் நாசரையும் பார்க்க பரிந்துரைக்கலாம்.
அப்படியே, கோடையில அணை தண்ணீரை வற்றாம பாதுகாப்பது எப்படிங்கிறதை, உங்க கட்சியின் செல்லுார் ராஜுவிடம் கத்துக்க சொல்லிடுங்க!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'எதிரியை களமாட விட வேண்டும். எதிரியின் வாள் பறிக்கப்படக் கூடாது; களம் மறுக்கப்படக் கூடாது' என, கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். களமறிந்து, பலமறிந்து, தன் பலவீனமறிந்து எதிரி வாள் வீச வேண்டும். களம் கடினமானது என்பதை எதிரி மறக்கக் கூடாது.
வாஸ்தவம் தான்... ஆனா, எதிரிக்கு எதிராக வாள் வீசுவதை விடுத்து, உள்பக்கமாக திரும்பி கூட்டணிக்குள்ளே கத்தி வீசுவதும் தப்புதானே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
ஹிந்தியை, ஹிந்தியாக திணித்தால் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால், ஹிந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எந்த வழியில் ஹிந்தியை திணிக்க, மத்திய அரசு முயன்றாலும், அதை தமிழ் மக்கள் முறியடிப்பர். ஆவின் நிறுவனத்தின் தயிர் உறைகளில், தயிர் என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இது தொடர்பான எந்த நெருக்கடிக்கும், ஆவின் நிறுவனம் பணியக் கூடாது; மறைமுகமாக ஹிந்தியை திணிக்கும் செயலுக்கு துணை போகக் கூடாது.
இதற்கு தான் தமிழக முதல்வர் எதிர்வினையாற்றி விட்டாரே... இவரும், தன் பங்குக்கு முட்டுக் கொடுத்து, கூட்டணியை உறுதிப்படுத்துறாரோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தொடர் குளறுபடிகள் நடப்பது வேதனைக்குரியது. இது குறித்து, தேர்வாணைய செயலரிடம் அறிக்கை கேட்டிருப்பதாக, நிதிஅமைச்சர் தெரிவித்து உள்ளார். விளக்கம் கேட்பதை விட, விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவது தான் பொருத்தமாக இருக்கும். அப்போதுதான் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வரும்.
விரிவான விசாரணை நடத்திட்டா மட்டும், ஆட்சியாளர்களின் தவறுகளை அதிகாரிகள் அம்பலப்படுத்திடுவாங்களா?
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!